தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், தவெக சார்பில் அமைக்கப்பட்டுள்ள 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கைக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்று (ஜன. 20) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கே.ஜி. அருண்ராஜ் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் ஏ. ராஜ்மோகன் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான வாக்குறுதிகளை உருவாக்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
குறிப்பாக, பல்வேறு தரப்பு மக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, தரவுகளைச் சேகரிக்கும் முறை குறித்து இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதால், தவெக-வின் முதல் தேர்தல் அறிக்கை மீதான எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
