புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அங்கு, டெல்லி டுவர்கா எக்ஸ்பிரஸ்வே மற்றும் நகர்ப்புற விரிவாக்கச் சாலை (UER-II) இணைப்பை திறந்து வைத்தார்.
இதன் மூலம் டெல்லி மற்றும் குருகிராம் இடையே தினசரி பயணம் செய்பவர்களுக்கு மிகப் பெரிய வசதி கிடைக்கும் என்றும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்றும் அவர் கூறினார். “உலகம் இந்தியாவைப் பார்த்தால் முதலில் டெல்லியையே பார்க்கிறது. எனவே, டெல்லியை வளர்ச்சி மாதிரியாக மாற்ற வேண்டும்” என்று பிரதமர் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், அரசியலமைப்பை மதிப்பதாக கூறும் சிலர் கடந்த காலத்தில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அநீதியான சட்டங்களை கொண்டு வந்தனர் என்பதை அவர் எடுத்துக்காட்டினார். “ஒரு துப்புரவுத் தொழிலாளர், முன்னறிவிப்பு இன்றி ஒரு நாள் வேலைக்கு வரவில்லையெனில் அவரை ஒரு மாதம் சிறையில் அடைக்கலாம் என்ற சட்டம் டெல்லியில் இருந்தது. இன்று சமூக நீதியைப் பற்றிப் பெரிதாகப் பேசுபவர்கள் நாட்டில் இதுபோன்ற பல விதிகளையும் சட்டங்களையும் உருவாக்கியுள்ளனர். இதுபோன்ற அநீதியான சட்டங்களை அயராது கண்டுபிடித்து ஒழிப்பவன் இந்த மோடி.
மேலும், வரி சீர்திருத்தங்களைப் பற்றி பேசும்போது, ஜிஎஸ்டியை எளிமையாக்கும் அடுத்த தலைமுறை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், அதனால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், வியாபாரிகள் அனைவருக்கும் நன்மை உண்டு என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதற்கான முன்மொழிவுகள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு “இரட்டை போனஸ்” காத்திருக்கிறது என்றும் அவர் உறுதியளித்தார். இதனால் மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
