திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவரும், நடிகையுமான குஷ்பு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக-வின் தயாரிப்புகள் குறித்துப் பேசிய அவர், “தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது; நேரம் வரும்போது நிச்சயம் தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்” என்று தெரிவித்தார்.
குறிப்பாக, வரும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “மக்களுக்குச் சேவை செய்ய நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன்; கட்சித் தலைமை உத்தரவிட்டால் வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடத் தயாராக உள்ளேன்” என்று உறுதிபடத் தெரிவித்தார். ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், பாஜக தலைமையிலான கூட்டணி வரும் தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
