தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், 60 முதல் 70 வயது வரையுள்ள மூத்தகுடிமக்கள் மனநிறைவோடு இறை தரிசனம் பெறும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் அரசு மானியத்தில் ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கும், அறுபடை வீடுகளுக்கும், இராமேஸ்வரத்திலிருந்து காசிக்கும் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். மேலும், சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகிய புனித தலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆன்மிகப் பயணம் சென்று வரும் தலா 500 பக்தர்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
2023-2024 ஆம் நிதியாண்டில் மானசரோவர் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் 40,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும், முக்திநாத் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் 10,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாகவும், 2025– 2026 ஆம் நிதியாண்டில் மானசரோவர் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும், முக்திநாத் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் 20,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.
அதன்படி, நடப்பாண்டில் முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட தகுதி வாய்ந்த 389 பக்தர்களுக்கு அரசு மானியமாக தலா ரூ. 30,000 வீதம் 1.17 கோடி ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றபின், 9.94 கோடி ரூபாய் அரசு நிதியில் அறுபடை வீடுகளுக்கு 4,015 பக்தர்களும், இராமேஸ்வரம் காசி ஆன்மிகப் பயணத்திற்கு 1,520 பக்தர்களும், ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு 3,004 பக்தர்களும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கு 3,014 பக்தர்களும் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட 1,034 பக்தர்களுக்கு 2.36 கோடி ரூபாய் அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மானசரோவர் ஆன்மிகப் பயணம் செல்ல அனுமதி வழங்கப்படாததால் அரசு வழங்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின்கீழ் (Master Plan) பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை புரியும் முக்கிய திருக்கோயில்களான திருச்செந்தூர், சமயபுரம், இராமேஸ்வரம், பழநி, அழகர்கோவில், மருதமலை, திருவேற்காடு, பெரியபாளையம், சிறுவாபுரி உள்ளிட்ட 19 திருக்கோயில்களில் 1,770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, 14 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 764 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது என அரசு தெரிவித்துள்ளது.
2025-2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது, “கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் தேவஸ்தானத் திருக்கோயில்களுக்கு அரசு மானியம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை நிறைவேற்றிடும் வகையில், திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவினங்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை கன்னியாகுமரி தேவஸ்தானத்திற்கு 13 கோடி ரூபாயிலிருந்து 18 கோடி ரூபாயாகவும், புதுக்கோட்டை தேவஸ்தானத்திற்கு 8 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாகவும் மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு 6 கோடி ரூபாயிலிருந்து 8 கோடி ரூபாயாகவும் உயர்த்தி, அதற்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களின் பரம்பரை அறங்காவலர் மற்றும் நிர்வாகிகளிடம் முதலமைச்சர் வழங்கினார்.
