டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டில், சீனாவின் தயாரிப்பை இந்தியாவின் கண்டுபிடிப்பு எனக்கூறி காட்சிப்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிற்கு உலக அளவில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
டெல்லி பாரத் மண்டபத்தில் கடந்த 16-ம் தேதி சர்வதேச AI உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் 600-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
இதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் சார்பில் ‘ஓரியன்’ (Orion) என்ற பெயரிடப்பட்ட ரோபோ நாய் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. இது அந்தப் பல்கலைக்கழகத்தின் சொந்தக் கண்டுபிடிப்பு என்று விளம்பரப்படுத்தப்பட்டது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ரோபோவின் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டியிருந்தார்.
இந்நிலையில், அந்த ரோபோ உண்மையில் சீனாவின் ‘Unitree Go2’ என்ற நிறுவனத்தின் தயாரிப்பு என்பதும், அதன் மீது பல்கலைக்கழக முத்திரை மட்டுமே ஒட்டப்பட்டிருந்ததும் ஆதாரங்களுடன் அம்பலமானது. இதனையடுத்து, கடும் விமர்சனங்கள் எழுந்ததால் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது பதிவை நீக்கினார். மேலும், கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் மாநாட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு AI விவகாரத்தில் உலக அரங்கில் இந்தியாவை கேலிப் பொருளாக மாற்றியுள்ளது. சீன தயாரிப்பை நம்முடையது எனக் காட்டியதால் சீன ஊடகங்கள் நம்மை எள்ளி நகையாடுகின்றன. இது நாட்டிற்கு நேர்ந்த அவமானம்” எனக் குறிப்பிட்டுள்ளது.
The misleading perception wrt the Chinese made robo dog by Galgotias University at the Delhi AI Summit was an embarrassment for us. At a robotic exhibition last year June, I had played with this Robo Dog & the young entrepreneurs were honest that it was from China.#AISummit pic.twitter.com/znEekvqCRa
— Tehseen Poonawalla Official
(@tehseenp) February 18, 2026
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“இந்தியாவின் திறமை மற்றும் தரவுகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இந்த AI உச்சி மாநாடு ஒரு முறையற்ற விளம்பர (PR) நிகழ்வாக மாறியுள்ளது. இந்திய தரவுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், சீனத் தயாரிப்புகள் இந்தியக் கண்டுபிடிப்புகள் போலக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என மத்திய அரசைச் சாடியுள்ளார். மேலும் வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் ஏற்பட்டுள்ள இந்தச் சர்ச்சை சர்வதேச அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
Instead of leveraging India’s talent and data, the AI summit is a disorganised PR spectacle – Indian data up for sale, Chinese products showcased. https://t.co/5liaoX0XXp
— Rahul Gandhi (@RahulGandhi) February 18, 2026

