ஈரான் : மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நடத்திய கூட்டு ஏவுகணைத் தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உட்பட மூத்த அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை முற்றிலும் அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதுவரை 131 நகரங்கள் மீது நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதலில் ஈரான் தரப்பில் 555 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை சிவிலியன்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட உள்ளது.இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தரப்பிலிருந்து இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஜோர்டான், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதனால் வளைகுடா பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ளது. ஹிஸ்புல்லா போன்ற ஈரான் ஆதரவு அமைப்புகளும் இஸ்ரேல் மீது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றன. இந்தப் பதிலடி தாக்குதல்கள் காரணமாக பல நாடுகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் வசிக்கும் சுமார் 90 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஒன்றிய அரசு கவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 39 லட்சம், சவுதி அரேபியாவில் 27.5 லட்சம், குவைத்தில் 10.1 லட்சம், கத்தாரில் 8.3 லட்சம், ஓமனில் 6.62 லட்சம், பஹ்ரைனில் 3.47 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். ஈரானில் சுமார் 10,000 இந்தியர்கள் உள்ள நிலையில், அங்கு செல்போன் மற்றும் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களைத் தொடர்பு கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இந்தப் போர் பதற்றத்தை கவலையளிப்பதாகக் கூறியுள்ளார். “மேற்கு ஆசியாவில் நிலவும் போர் நிலைமை கவலை அளிக்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழியில் தீர்வு காண வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயல்படுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தப் போர் மோதல் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் விலை உயர்வு, உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம், பயங்கரவாத அச்சுறுத்தல் ஆகியவை குறித்து பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ஈரானின் 555 உயிரிழப்புகள் மற்றும் 131 நகரங்கள் மீதான தாக்குதல் இந்த மோதலின் தீவிரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. சர்வதேச சமூகம் உடனடியாக இடைநிலை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
