டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதிலிருந்தே சர்ச்சைகளுக்குக் குறைவில்லாத செயல்பாடுகளைச் செய்து கொண்டே இருக்கிறார்.
முதலில் பல நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு தன் இஷ்டத்திற்கு இறக்குமதி வரியைக் கூட்டினார்.
பல நாடுகளில் இருந்து எதிர்ப்புகள் வெளிப்பட்டபோதும் டிரம்பின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தபோதும் அவர் தன்னை அதீத வரி விதிக்கும் எஜமானரைப் போலவே செயல்பட்டு வந்தார்.
இதையடுத்து அமெரிக்காவில் உள்ள பொதுநலன் விரும்பும் மக்கள் டிரம்பின் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அமெரிக்க உச்சநீதிமன்றம் டிரம்பின் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்து வரியை 10 சதவிகிதம் அளவுக்குக் குறைத்தது.
இருந்தும் டிரம்ப் அடங்கவில்லை. மறுபடியும் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு 15 சதவிகிதம் வரை வரியை உயர்த்தினார்.
இப்படிப்பட்ட அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியில், அவரது பார்வை ஈரான் மீது அழுத்தமாக விழுந்திருக்கிறது.
ஏற்கனவே இஸ்ரேல் அமெரிக்காவுக்கு நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருவதால் இஸ்ரேலை முன்னிறுத்திப் போருக்கான விதை விதைக்கப்பட்டது.
இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஈரான் பதிலுக்கு தாக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இதையடுத்து பெரும் தாக்குதல்கள் ஈரான் மீது வலுவான சேதத்தை ஏற்படுத்துகிறபடி நிகழ்த்தப்பட்டன.

ஈரானின் மிகமுக்கியத் தலைவராக 30 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வந்தவரான காமேனியும் அவரது குடும்பமும் முக்கியமான அதிகாரிகளும் குறிவைக்கப்பட்டு, அவர்கள் உயிரிழக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது.
ஈரானில் உள்ள பள்ளிக்கூடங்கள் மீதெல்லாம் தாக்குதல் நடத்தி அந்தப் பள்ளிகளில் இருந்த 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் உடல் சிதறி இறந்துபோனார்கள். இப்படி ஈரானில் ஆயிரக்கணக்கான உயிர்ச் சேதங்கள்.
இதையடுத்து, ஈரான் அமெரிக்கா இராணுவ முகாம் அமைத்திருந்த பல்வேறு இஸ்லாமிய நாடுகள் மீது ஏவுகணைகளை வீசித் தாக்கியது. இஸ்ரேலையும் தாக்கியது.
இப்போது வரை தொடர்ந்து நடத்து வரும் போர்ச் சூழலை ஒரு ‘பெரியண்ணன்’ மனோபாவத்தில் நடத்தி வருவதோடு, ஈரானுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தபடியும் இருக்கிறது அமெரிக்கா. அதே சமயம் ஈரானை பேச்சுவார்த்தைக்கு வரும்படியும் அழைக்கிறது.
ஆனால், இத்தகைய பேச்சுவாத்தைக்கான அழைப்பை மறுத்து, தொடர்ந்து அனைத்து வகையிலும் போராடுவோம் என்று அறிவித்திருக்கிற ஈரான், தன்னளவில் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கிறது.
ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் இஸ்ரேல் நடத்தி வரும் அதிகாரத்தை முன்னிறுத்திய போர், தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் இன்னும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோக நேரிடலாம்.
ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் வெளியேறும் சூழல் ஏற்படலாம்.

ஏற்கனவே துபாய் உட்பட விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், வளைகுடா நாடுகளில் இருந்து உலகம் முழுக்க வினியோகமாகும் எண்ணை ஏற்றுமதி நிச்சயம் பாதிக்கும்.
இதன் விளைவாக சர்வதேச அளவில் கச்சா எண்ணைக்கான செயற்கையான நெருக்கடி உருவாகும்.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை பன்மடங்கு உயர நேரிடலாம். இதனால் இதரப் பொருட்களின் விலையேற்றமும் நடக்கலாம். பல நாடுகளின் பொருளாதாரம் கீழிறங்கலாம்.
இதையெல்லாம் ஆட்டுவிக்கிறவராகப் பார்க்கப்படுபவர் அமெரிக்க அதிபரான டிரம்ப்.
பல நாடுகள் மீது தன்னுடைய ஆளுமையை அதிகரித்துப் போர்ச் சூழலையும் உருவாக்கி, பொருளாதாரத்தையும் சீர்குலைத்து, பல உயிர்களை பலியிடும் அளவுக்கு விபரீதத்தை உருவாக்கியிருக்கும் டிரம்பிற்கும் அவரை பெரும்பான்மையாக ஆதரித்து தேர்ந்தெடுத்த மக்களுக்கும் என்னதான் கிடைக்கப்போகிறது?
– யூகி
