பொன்னேரி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தமிழகம் வந்தார்.பொன்னேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு எதிரானவை என்று கடுமையாக விமர்சித்தார்.
ராகுல் காந்தி பேசியதாவது:“பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் அடிப்படையிலேயே தமிழ்நாட்டிற்கு எதிரானவர்கள். பாஜகவைப் பொறுத்தவரை டெல்லியிலிருந்து அவர்களின் உத்தரவை, திட்டத்தை செயல்படுத்த ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு வேண்டும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இந்தியாவிலிருந்து நரேந்திர மோடி எப்படி சமரசம் செய்துகொள்கிறாரோ, அதுபோல தமிழ்நாட்டிலிருந்து சமரசம் செய்துகொள்ளக்கூடிய ஒரு நபர் டெல்லியில் பாஜகவிற்கு வேண்டும்.”மேலும் அவர் கூறியதாவது:“பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அதிமுக அழிந்துவிட்டது. இப்போது இருப்பது வெறும் முகமூடிதான். அது பாஜகவினுடையது” எனவும் தெரிவித்தார் .
ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தில் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்படும் முக்கிய வாக்குறுதிகளையும் அறிவித்தார்.
ராகுல் காந்தி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.“மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற பெயரை வைத்து தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பாஜக முயற்சித்தது.
தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு மக்களுக்கும் என் இதயத்தில் எப்போதும் தனித்த இடம் உண்டு. எவ்வளவு தைரியம் இருந்தால் தமிழ் மண், மொழி, கலாச்சாரம் மீது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் தாக்குதல் நடத்துவார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.பொன்னேரி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியின் உரை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க காங்கிரஸ் உறுதியாக நிற்கும் என்று அவர் வலியுறுத்தியது கூட்டத்தில் பெரும் கரகோஷத்தை ஏற்படுத்தியது.
