ஈரான் போர் – இந்தியா சந்திக்கும் சவால்கள்!

Estimated read time 1 min read
ஈரானுக்கும், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் இடையே போர் நடப்பது என்னவோ மத்திய கிழக்கு பகுதியில்தான். ஆனால், அதனால் கடுமையாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

இந்தப் போரால் இந்தியா எதிர்காலத்தில் பல நேருக்கடிகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று பொருளாதார வல்லுநர்களும் அரசியல் வல்லுநர்களும் எச்சரித்து வருகிறார்கள்.
இந்தப் போரால் இந்தியா என்னென்ன சவால்களைச் சந்திக்கிறது என்பதைப் பார்ப்போம்.
அதிகரிக்கும் எண்ணெய் விலை:
மத்திய கிழக்கு நாடுகளில் இப்போது நடக்கும் போரால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பாதிப்பு கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பு.
இந்தியாவைப் பொறுத்தவரை நமக்கு தேவையான கச்சா எண்ணெயில் சுமார் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்து வருகிறோம்.
குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் நாளொன்றுக்கு 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது.
இந்தச் சூழலில் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து மூண்டுள்ள போரால் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் பெரும்பாலும் ஈரானை ஒட்டியுள்ள ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகத்தான் இந்தியாவுக்கு வருகிறது.
குறைந்தது 50 சதவீத கச்சா எண்ணெயாவது இந்த ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக வருகிறது.


தற்போது போரால் இந்த ஜலசந்தி வழியாக கப்பல்கள் வருவது பாதிக்கப்படுவதால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வருவது பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
ஒரு பக்கம் கச்சா எண்ணெயின் விலை உயர்வு, மறுபக்கம் கச்சா எண்ணெய் இந்தியாவுக்குள் வரும் வழி அடைபடுவது ஆகிய இரண்டும் சேர்ந்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது.
சரியும் ரூபாயின் மதிப்பு:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வதால், இந்தியாவின் அந்நியச் செலாவணி உயரும்.
அதனால் அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
மார்ச் 2-ம் தேதி நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 பைசா சரிந்து 91.29 ஆக இருந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வாக்குப்படி ஈரான் மீதான தாக்குதல் இன்னும் 4 வாரங்களாவது நீடிக்கப்படலாம்.
அப்படி நீடிக்கும் பட்சத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்து, பொருளாதாரத்தை பாதிக்கும். இந்தியாவின் பணவீக்கம் அதிகமாகும்.
சிக்கித் தவிக்கும் மாணவர்கள்:
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத பல மாணவர்கள் இப்போது ஈரானில் தங்கியிருந்து மருத்துவம் பயில்கிறார்கள்.
அந்த வகையில் ஜம்மு காஷ்மீர், கேரளா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் இப்போது ஈரானில் தங்கி மருத்துவப் படிப்பை படித்து வருகிறார்கள்.
இதில் ஒரு சிலர் ஏற்கெனவே நாடு திரும்பிவிட்டாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போது ஈரானில் சிக்கியிருக்கிறார்கள்.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலால் அவர்களை பத்திரமாக மீட்டு வருவது இந்தியாவுக்கு பெரும் சவாலாக உள்ளது.
வளைகுடா நாடுகளில் பாதிக்கப்படும் தொழிலாளர்கள்:
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்நாடு அமெரிக்காவின் தளம் அமைந்துள்ள துபாய், குவைத், பஹரைன் உள்ளிட்ட பக்கத்து நாடுகளின் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
வளைகுடா நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு இது அச்சுறுத்தலாக உள்ளது.
அமைதி குலையும் ஆபத்து:


ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்து இந்தியாவின் பல பகுதிகளிலும் போராட்டம் நடக்கிறது.
குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடப்பதால் இணையதள சேவையை நிறுத்தும் சூழல் உள்ளது.
இந்தப் போராட்டம் மேலும் அதிகரித்து, இந்தியாவில் வன்முறைச் சூழல் ஏற்படும் அபாயம் இருப்பதாக மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஆக, கேயாஸ் தியரி உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் போரால், இந்தியாவுக்கும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
அதனால் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவருவது இந்தியாவுக்கும் இப்போது அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.
– பி.எம். சுதிர்

Please follow and like us:

You May Also Like

More From Author