லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடனான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அந்த அமைப்புக்கு எதிரான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் வேண்டுகோளுக்கிணங்க 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதித்துள்ள போதிலும், ஹிஸ்புல்லாக்களை முழுமையாகக் கலைக்கும் பணி இன்னும் முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை ஹிஸ்புல்லா அமைப்பின் வசம் இருந்த ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் கையிருப்புகளில் சுமார் 90 சதவீதத்தை இஸ்ரேல் ராணுவம் அழித்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், லெபனான் மீது இனி குண்டுவீச வேண்டாம் என்று அமெரிக்கா இஸ்ரேலுக்குத் தடை விதித்துள்ளதாக அதிபர் டிரம்ப் சமூக ஊடகங்களில் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே நெதன்யாகுவின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தாலும், தங்கள் இலக்கை அடையும் வரை ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்பதை நெதன்யாகுவின் பேச்சு உணர்த்துகிறது.
இந்தச் சூழலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நிலவுமா அல்லது மீண்டும் போர் தீவிரமடையுமா என்ற பதற்றம் உலக நாடுகளிடையே தொடர்ந்து நீடித்து வருகிறது.
