எம்ஜிஆர் எனது சகோதரர்!

Estimated read time 1 min read
“இப்படியும் நடிகரா?” என்றுதான் தோன்றியது பழம்பெரும் நடிகரான எம்.கே.ராதா அவர்களை முதிர்ந்த வயதில் அவரது வீட்டில் சந்தித்தபோது.

சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன்னரையில் நுழைந்தபோது சிறிது நேரத்தில் கைக்கூப்பிய வணக்கத்துடன் வந்து அமர்ந்த மெட்ராஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன் என்கின்ற எம்.கே.ராதா.
பளிச் சென்று வெள்ளை வேட்டியும், கை வைத்த பனியனுமாக வந்து எதிரில் உள்ள சோபாவில், அமர்ந்தார். புன்னகைத்த அவரது முகத்தில், திருநீறு பளபளத்தது.
எந்தப் பத்திரிகை என்றெல்லாம் பரிவான குரலுடன் விசாரித்தவர், தன்னைப்பற்றி சொல்வதற்கே எதனாலோ கூச்சப்பட்டார்.
ஏறின நெற்றியுடன் நரையோடிய தலையுடன் இருந்தாலும், பலவிதமான ஒப்பனைகளைக் கண்ட முகம் அது என்பதை அவரது செறிவான முகம் உணர்த்திக் கொண்டிருந்தது.
மிருதுவானக் குரலில் பேசினார். வியப்பாக இருந்தது எனக்கு. அவரது தந்தையான கந்தசாமி பிரபல பாய்ஸ் கம்பெனியை நடத்தி, எத்தனையோ பிரபல நடிகர்கள் உருவாக வழிவகுத்தவர்.
தந்தை நடத்திய நாடகக் கம்பெனியிலேயே மகனும் நடித்திருக்கிறார். அப்போது, எம்ஜிஆர் உள்ளிட்ட பல நடிகர்களுடன் அவருக்குப் பழக்கம் இருந்திருக்கிறது.
எஸ்.எஸ்.வாசன் கதையெழுதி தயாரிக்கப்பட்ட சதி லீலாவதிப் படத்தில் எம்.கே.ராதா நடித்தபோது, அந்தப்படத்தில், அந்தப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர் எம்.ஜி.ஆர்.
அப்போது, ஜெமினி நிறுவனம் தயாரித்த பல படங்களில் ஆஸ்தான நாயகனாக இருந்தார். ஜெமினி தயாரித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில், இரட்டைவேடத்தில் அப்போதே நடித்து புகழ்பெற்றவர்.
ஜெமினியின் மிக பிரம்மாண்டமான தயாரிப்பில் சந்திரலேகா திரைப்படத்தில் கதாநாயகன் எம்.கே.ராதாதான். ரஞ்சன் அதில் வில்லனாக நடித்திருப்பார். எம்கேராதா டிஆர்ராஜகுமாரி என்று பலருக்கும் பெரும் பெயரை சம்பாதித்துக் கொடுத்த அந்தப்படம் மற்ற மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது.
இதேமாதிரி இவர் கதாநாயகனாக நடித்த பாசவலை படமும் பெரும் வெற்றியைப் பெற்றது.
அந்தப் படத்தில், அறிமுகமானவர்தான் மக்கள் கவிஞரான பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்.
அந்தப்படத்தில் இவருக்கான பல பாடல்களைப் பாடியிருப்பார் சிதம்பரம் ஜெயராமன்.
ஏறத்தாழ 50 படங்களுக்கு மேல் நடித்த இவர், 60-களுக்குப் பிறகு பெரிய அளவில், நடிக்காமல் ஒதுங்கியே இருந்தார்.
ஒரு திரைப்பட விழாவில், தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர், எம்.கே.ராதாவின் காலில் விழுந்து வணங்கியபோது, அன்றைய தினசரிகளில், அது முக்கியமான புகைப்படமாகியது.
இப்படியெல்லாம் புகழ் பெற்றிருந்த எம்.கே.ராதாவை 1985-ல் அவர் மறைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தபோதுதான், தன்னைப்பற்றி பேசுவதற்கே மிகவும் தயங்கினார்.
“நாடகங்களிலும் படங்களிலும் நடிச்சே… என்னால் முடிஞ்சத செஞ்சே… அதுக்குமேல என்னப்பா இருக்கு… என்னப்பத்தி நானே எப்படி உயர்வா பேச முடியும்… அதனால என்னப்பத்தி எதுவும் எழுத வேணா…” என்று சாந்தமான முகத்துடன் சொன்னவர் காஃபி கொடுத்து உபசரித்து மேலும் கால் மணி நேரம் சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்.
அவரதுப் பேச்சில், சிறிதும் அகந்தை இல்லாத மனோபாவம் தெரிந்தது. வயது குறைந்த நிலையில் நான் அவரை சந்தித்தபோதும் கூட, “வாங்க.. போங்க..” என்று மரியாதையுடனேயே பேசினார்.
பாய்ஸ் கம்பெனி காலத்தை நாங்கள் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுத்தக் காலம்” என்று ரத்தினச் சுருக்கமாகச் சொன்னார்.
தன்னுடன் நடித்த பலரையும் இயக்கியவர்கள் பலரையும் மதிப்புடன் கொண்டாடும் விதத்திலேயே பேசினார்.
அப்போது, தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். விழா ஒன்றில், அவருடைய காலில் விழுந்து வணங்கியதைப் பற்றிக் கேட்டபோது, “எம்.ஜி.ஆர் என்னுடைய சகோதரரைப் போல.. இந்த வளர்ச்சிக்கு அவர் என்ன பாடு பட்டிருக்கிறார் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்” என்று சொன்னபோது அவருடைய குரலில் முதிர்ந்த கனிவு தெரிந்தது.
அவருடமிருந்து விடைபெற்றபோது, “நேரமாயிருச்சே… சாப்பிட்டு போலாம்ப்பா…” என்று உபசரிப்புடன் பேசிய வரை மறுபடியும் வணங்கிவிட்டு வெளியே வந்தபோது, பிரியமான மனிதர் ஒருவரை பார்த்துவிட்டு வருகிற உணர்வை மனதில் நிறைந்திருந்தது.
– மணா.

Please follow and like us:

You May Also Like

More From Author