நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி வெளியான இத்திரைப்படம், இதுவரை 55 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
தனது 48 ஆண்டுகால திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத ஒரு புதுமையாக, இப்படத்தின் லாபத்தில் ஒரு பகுதியை ராதிகா தனது சம்பளமாகப் பெற்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட ராதிகா, தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் லாபத்தில் பங்கு பெற்ற முதல் கதாநாயகி நானாகத்தான் இருப்பேன் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் இத்தகைய கௌரவம் தனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.
ஒரு மூத்த நடிகையின் படத்தை நம்பி முதலீடு செய்து, அதன் லாபத்தில் அவருக்கும் பங்கு கொடுத்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனின் இந்த செயலைத் திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.
