உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹஜ்ரத் என்ற கார் ஓட்டுநர், டெல்லியில் உபெர் நிறுவனத்தில் இணைந்து சுமார் 50,000 பயணங்களை வெற்றிகரமாக முடித்து ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ஆரம்பத்தில் ஒரு தையல் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்த அவர், நண்பரின் அறிவுரையால் கார் ஓட்டத் தொடங்கியுள்ளார். தான் படிக்காதவன் என்பதால் ஜிபிஎஸ் (GPS) மற்றும் லொகேஷன் பார்க்க முடியுமா என அஞ்சியவருக்கு, அனுபவம் கை கொடுத்துள்ளது. ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 1,20,000 ரூபாய் வரை சம்பாதித்துள்ளதாக அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இருப்பினும், இந்த வருமானக் கணக்கு சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பொதுவாக டெல்லியில் ஒரு உபெர் ஓட்டுநரின் சராசரி மாத வருமானம் 20,000 முதல் 30,000 ரூபாய் வரை மட்டுமே இருக்கும் நிலையில், ஹஜ்ரத் கூறும் 1.20 லட்சம் என்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வருமானம் ஓட்டுநர் வேலை செய்யும் நேரம், இடங்கள் மற்றும் ‘சர்ஜ்’ (Surge) விலையைப் பொறுத்து மாறுபடும் என்றாலும், அவரது கடின உழைப்பு மற்றும் 50,000 டிரிப்ஸ் என்ற சாதனை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
