
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 1250 சட்டப்படிப்பு முடித்தவர்கள், வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்டனர். இதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பேரறிவாளனும் ஒருவர். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் அவர் முறைப்படி வழக்கறிஞராகப் (Advocate) பதிவு செய்துகொண்டார்.
பேரறிவாளனின் இந்தப் பதிவு ஒரு உணர்ச்சிகரமான நிகழ்வாகும். தனது விடுதலைக்காகவும், நீதிக்காகவும் சுமார் 31 ஆண்டுகள் எந்த சென்னை உயர்நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கினாரோ, அதே நீதிமன்றத்தில் இனி அவர் ஒரு வழக்கறிஞராகக் கருப்பு அங்கி அணிந்து மற்றவர்களுக்காக வாதாடப் போகிறார்.
சிறைவாசத்தின் போது நேரத்தை வீணடிக்காமல் பேரறிவாளன் தனது கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டினார். சிறையில் இருந்தபடியே பல்வேறு பட்டயப் படிப்புகளை (Diplomas) முடித்தார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டப் படிப்புகளில் சிறந்து விளங்கினார். விடுதலைக்குப் பிறகு தனது சட்டப் படிப்பை முழுமையாக முடித்து, தற்போது மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞராக மாறியுள்ளார்.
நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், வரவேற்புரையாற்றினார்.
இந்திய பார் கவுன்சில் துணைத்தலைவர் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத்தலைவர் கார்த்திகேயன், வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
வழக்கறிஞர் சந்திரசேகர், பதிவை முன்மொழிந்தார். பதிவுக்குழு தலைவர் வழக்கறிஞர் பாலு, புதிய வழக்கறிஞர்களுக்கு பதிவு பிரமாணம் செய்து வைத்தார்.
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் வழக்கறிஞராக பதிவு செய்ய முடியாது. இதுசம்பந்தமாக காவல் துறையிடம் ஆட்சேபனையில்லா சான்று பெறப்படும். பேரறிவாளனுக்கு எதிராக ராஜிவ் கொலை வழக்கு மட்டும் இருந்தது. இந்த வழக்கில், அவர் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதால், அவர் வழக்கறிஞராக பதிவு செய்ய ஆட்சேபமில்லா சான்று காவல் துறை தரப்பில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த பேரறிவாளன்?
பேரறிவாளன் இந்தியாவில் பெரும் கவனம் பெற்ற ஒரு வழக்கின் மூலம் அனைவருக்கும் அறிமுகமானவர். 1991ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராக அவர் கைது செய்யப்பட்டார். வெடிகுண்டு தொடர்பான பொருட்களை வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட போது இளம்வயதில் இருந்த அவர், அதன் பின்னர் சுமார் 31 ஆண்டுகள் சிறையில் கழித்தார்.
இந்த நீண்ட கால சிறைவாசத்திலும் அவர் அமைதியாக இருந்துவிடவில்லை. தனது மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர்ந்து நீதிமன்றங்களை அணுகி சட்டப்போராட்டம் நடத்தி வந்தார். இதன் விளைவாக அவருக்கு விடுதலையும் கிடைத்தது. இறுதியாக, 2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பு, பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பமாக கருதப்பட்டது.
விடுதலைக்குப் பிறகு, தனது வாழ்க்கையை புதிய பாதையில் கொண்டு செல்லும் முயற்சியாக பேரறிவாளன் சட்டத் துறையைத் தேர்ந்தெடுத்தார். சமீபத்தில் அவர் வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டிருப்பது, ஒருகாலத்தில் அதே நீதிமன்றத்தில் தனது சுதந்திரத்திற்காக போராடிய ஒருவராக இருந்து, இன்று அதே சட்ட அமைப்பின் ஒரு பகுதியாக மாறியிருப்பதை உணர்த்துகிறது. அவரது வாழ்க்கை, நீதித்துறை, மனித உரிமைகள் மற்றும் மறுவாழ்வு குறித்து பல சிந்தனைகளை எழுப்பும் வகையில் உள்ளது.
