உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் முதுகெலும்பாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz), தற்போது ஈரானின் புதிய கட்டுப்பாடுகளால் உலக நாடுகளைத் தலைசுற்ற வைத்துள்ளது.
பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்த நீர் வழிப்பாதையை ஈரான் மூடிவிட்டது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், தற்போது ஒரு ‘ட்விஸ்ட்’ கொடுத்துள்ளது ஈரான்.
“ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல அனுமதிப்போம், ஆனால் ஒரு நிபந்தனை.. வர்த்தகம் அனைத்தும் சீனாவின் ‘யுவான்’ (Yuan) பண மதிப்பில் தான் நடக்க வேண்டும்” என்பதே அந்த அதிரடி நிபந்தனை.
இந்த முடிவு அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்திற்கு விழுந்த மிகப்பெரிய அடியாகக் கருதப்படுகிறது. இதுவரை கச்சா எண்ணெய் வர்த்தகம் பெரும்பாலும் அமெரிக்க டாலரிலேயே நடந்து வந்த நிலையில், ஈரானின் இந்தத் திடீர் அறிவிப்பு சீனாவிற்குப் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பலத்தைத் தரும். ஈரானுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் சீனா, இதன் மூலம் உலக எரிசக்தி சந்தையில் தனது பிடியை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
“யுவானில் பணம் கொடுத்தால் வழி உண்டு, இல்லையென்றால் வழி இல்லை” என்ற ஈரானின் பிடிவாதத்தால், இந்தியா உட்பட பல இறக்குமதி நாடுகள் இப்போது இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தப் பொருளாதார யுத்தம் போர்க்களத்தை விடவும் தீவிரமாக மாறியுள்ளது.
