இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக உச்சவரம்பை (Price Cap) மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதிரடியாக நீக்கியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இண்டிகோ விமானச் சேவையில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, பயணச்சீட்டு விலைகள் கடுமையாக உயருவதைத் தடுக்க இந்த உச்சவரம்பு விதிக்கப்பட்டது. தற்போது நிலைமை சீரடைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, நாளை (மார்ச் 23) முதல் இந்தத் தடையை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் விமான நிறுவனங்கள் சந்தை நிலவரத்திற்கு ஏற்பக் கட்டணங்களை மாற்றி அமைக்க அனுமதி கிடைத்துள்ளது.
இருப்பினும், கட்டணங்கள் நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்றும், அவசரகாலங்களில் பயணிகளைப் பாதிக்கும் வகையில் முறையற்ற கட்டண உயர்வில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
