தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத பரபரப்பைச் சந்தித்து வருகிறது. ‘மேஜிக் நம்பர்’ எனப்படும் 118 இடங்களை எட்ட முடியாமல் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) திணறி வரும் சூழலில், திராவிடக் கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் உற்றுநோக்கப்படுகின்றன.
தமிழகத்தின் இரு பெரும் துருவங்களான திமுக-வும், அதிமுக-வும் இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் விளக்கிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது,
“தற்போதைய அரசியல் சூழல் சிக்கலாக இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், திமுக-வும் அதிமுக-வும் இணைந்து அரசியல் செய்வது என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. அதிமுக-வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து திமுக எந்த முடிவும் எடுக்கவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது த.வெ.க-வின் பொறுப்பு. எங்களைப் பொறுத்தவரை விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் திமுக கூட்டணியிலேயே தொடர வேண்டும் என்பதே விருப்பம்
என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
திமுக இத்தகவலைத் திட்டவட்டமாக மறுத்தாலும், அதிமுக தரப்பில் இருந்து வரும் தகவல்கள் மர்மம் நீடிப்பதை உறுதி செய்கின்றன. இது குறித்து முன்னாள் அமைச்சர் செம்மலை கூறுகையில், “எடப்பாடி பழனிசாமி ‘கிங் மேக்கர்’ அல்ல, அவரே ‘கிங்’. எதுவாக இருந்தாலும் அவர் தீர்க்கமான முடிவை எடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுக தனது அரசியல் ஆட்டத்தை இன்னும் வெளிப்படையாகத் தொடங்கவில்லை என்பது உறுதியாகிறது.
இதற்கிடையே, இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநரைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. த.வெ.க தலைவர் விஜய் ஏற்கனவே ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், இ.பி.எஸ்-ஸின் இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
அதிமுக-வின் சில எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆளுநர் சந்திப்பு, விஜய்யின் முதலமைச்சர் கனவுக்கு முட்டுக்கட்டையாக அமையுமா அல்லது தமிழகம் மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்குமா என்பது தெரியவரும்.
