புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற முடியாமல் தவித்து வரும் நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்த சிறிது நேரத்திலேயே, முன்னாள் அமைச்சர்களான ஓ.எஸ். மணியன், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உட்பட சுமார் 30 எம்எல்ஏக்கள் புதுச்சேரியின் புதுக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு காரில் புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக எம்எல்ஏக்கள் தங்குவதற்காக அந்த ரிசார்ட்டில் 40 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும் சென்னையில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் புதுச்சேரிக்கு புறப்பட்டார். தற்போது புதுச்சேரி விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களுடன் தற்போதைய அரசியல் சூழல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
முன்னதாக எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற முயற்சித்து வருகிறது. இந்தச் சூழலில் அதிமுக எம்எல்ஏக்களை ஒருங்கிணைத்து புதுச்சேரியில் தங்க வைத்து ஆலோசனை நடத்தும் அதிமுகவின் இந்த நடவடிக்கை, அரசியல் அரங்கில் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்தக் கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலை, அதிமுகவின் அடுத்தகட்ட உத்திகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
