2026 கேரள சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9 அன்று நடைபெற உள்ள நிலையில், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், கேரளாவுக்கான தேர்தல் அறிக்கையை (வாக்குறுதிகளை) வெளியிட்டார். இந்த அறிக்கையில் ஏழை மக்களுக்கு பல்வேறு இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.பாஜக ஆட்சி அமைந்தால், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,500 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். இந்தக் கூப்பன் மூலம் மளிகைப் பொருட்கள், மருந்துகள், ரீசார்ஜ் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளைச் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏழை குடும்பத் தலைவிகள், கைம்பெண்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 2 எல்பிஜி கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் பாஜக அறிவித்துள்ளது.
இந்த வாக்குறுதிகள் தமிழ்நாட்டில் இலவசத் திட்டங்களை கடுமையாக விமர்சித்து வரும் பாஜகவின் அணுகுமுறைக்கு முரண்பாடாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. தமிழ்நாட்டில் “இலவசங்கள்” என்று விமர்சிக்கப்படும் அதே கொள்கையை கேரளாவில் பாஜக இப்போது வாரி வழங்கி வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.நிதின் நபின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது, “கேரளாவில் பாஜக ஆட்சி அமைந்தால் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இலவச கூப்பன், ஓய்வூதியம், சிலிண்டர் உள்ளிட்ட திட்டங்கள் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்க்கும்” என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்புகள் கேரளாவில் பாஜகவின் வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். கேரள சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9 அன்று நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறும்.தமிழ்நாட்டில் இலவசத் திட்டங்களை “பாழடைப்பு” என்று விமர்சித்த பாஜக, கேரளாவில் இதேபோன்ற இலவச வாக்குறுதிகளை அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
