மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருவெண்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. சீர்காழி (தனி) தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான இவர், அதிமுகவின் மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவராகவும் உள்ளார்.
இதற்கு முன்பாக அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த பாரதி, முன்னாள் ஒன்றியக் குழு தலைவராகவும், ஊராட்சி மன்றத் தலைவராகவும் பதவியில் இருந்துள்ளார்.
கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சீர்காழி (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 76,487 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.கிள்ளை ரவீந்தரனை விட கூடுதலாக 9,003 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதனை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் சீர்காழி (தனி) தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். மயிலாடுதுறை மாவட்டம் உருவாவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்தவர் பாரதி. இதனிடையே, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ பாரதியும் விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால், சீர்காழி (தனி) தொகுதிக்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சக்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் எம்எல்ஏ பாரதி, “சீர்காழி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிமுகவின் மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தைக் கட்சியின் பொதுச்செயலாளருக்கு அனுப்பி உள்ளேன். மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுகவிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களை தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் நாகை மாவட்டச் செயலாளரும், மண்டலச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களோடு இணைந்து பணியாற்ற முடியாத சூழ்நிலையில், தனது மாவட்ட அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். மேலும் என்றைக்கும் அதிமுகவுக்கும், கட்சி தலைமைக்கும் விசுவாசம் மிகுந்த தொண்டனாக செயல்படுவேன்” எனக் கூறினார்.
முன்னாள் எம்எல்ஏ பாரதி தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
