இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் பதற்றம் காரணமாக ஈரான் நாடு தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
2026 மார்ச் மாத நிலவரப்படி, அந்நாட்டின் பணவீக்கம் 50.6 சதவீதமாக உயர்ந்துள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை சாதாரண மக்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
ஈரானிய நாணயம் (Rial) அமெரிக்க டாலருக்கு நிகராகப் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதே இந்த நிலைக்கு முக்கியக் காரணமாகும். குறிப்பாக, ஈரானில் தற்போது ஒரு கிலோ அரிசி சுமார் 15 லட்சம் முதல் 20 லட்சம் ரியால்கள் வரை விற்கப்படுகிறது.
பருப்பு வகைகளின் விலையோ இன்னும் ஒருபடி மேலே சென்று, ஒரு கிலோ 25 லட்சம் முதல் 35 லட்சம் ரியால்கள் வரை எகிறியுள்ளது. காய்கறிகள் வாங்குவது கூட அங்கே குதிரைக்கொம்பாக மாறியுள்ள நிலையில், போர் சூழலால் எரிபொருள் விலையும் உயர்ந்து வருவதால் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது.
ஒரு நாட்டின் தவறான போர் முடிவுகள் சாமானிய மக்களின் வயிற்றை எப்படிப் பதம் பார்க்கும் என்பதற்கு ஈரானின் தற்போதைய அவல நிலையே சாட்சியாக உள்ளது.
