சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மற்றும் பொது செயலாளர் ஷிச்சின்பிங்கின் அழைப்பையேற்று, சீனக் கோமின்தாங் கட்சி தலைவர் செங் லீவன் அம்மையார் 7ஆம் நாள் கோமின்தாங் கட்சியின் பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமை தாங்கி ஷாங்காய் வழியாக நன்ஜிங் நகரைச் சென்றடைந்து பெருநிலப்பகுதியில் பயணம் மேற்கொள்ளத் துவங்கினார்.
தைவான் நீரிணையின் அமைதியைப் பேணிகாத்து மக்களுக்கு நன்மைகளைப் படைப்பது இப்பயணத்தின் நோக்கமாகும். அது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று நன்ஜிங்கைச் சென்றடைந்த பிறகு, செங் லீவன் தெரிவித்தார். 1992ஆம் ஆண்டில் உருவான ஒருமித்த கருத்தில் சீன கோமின்தாங் கட்சி ஊன்றி நிற்கும். தைவான் சுதந்திரத்தை எதிர்க்கும். இரு கரை உறவின் அமைதியான வளர்ச்சியை முன்னேற்றுவதற்குத் தொடர்ந்து முக்கிய பங்களிப்பை ஆற்றும் என்றும் அவர் கூறினார்.
இப்பயணம் மூலம், பொது செயலாளர் ஷிச்சின்பிங் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், தாய்நாடு ஈட்டியுள்ள மாபெரும் சாதனைகளை செங் லீவன் அம்மையார் நேரில் அனுபவிப்பார் என்று நம்புவதாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தைவான் விவகாரப் பிரிவின் தலைவர் சுங் டாவ் தெரிவித்தார்.
