வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் மீதான தடையை உறுதிப்படுத்தும் வகையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ‘பயங்கரவாத எதிர்ப்பு மசோதா’ நிறைவேற்றப்பட்டுள்ளது. முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த அவசரச் சட்டத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவாமி லீக் கட்சியின் அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்கள், சமூக வலைதள செயல்பாடுகள் மற்றும் ஊடக அறிக்கைகள் என அனைத்து விதமான கட்சி ரீதியான நடவடிக்கைகளுக்கும் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் அக்கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகள் முடியும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் சலாவுதீன் அகமது, அவாமி லீக் கட்சியை ஒரு “இனப்படுகொலை பயங்கரவாத அமைப்பு” என்று கடுமையாகச் சாடினார். மாணவர் போராட்டத்தின் மூலம் உருவான மக்கள் எழுச்சியின் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையிலேயே இந்தத் தடை சட்டமாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஏற்கனவே அவாமி லீக்கின் பதிவை இடைநிறுத்தம் செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஷபிக்குர் ரஹ்மான் இந்த மசோதா அவசரகதியில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்த போதிலும், குரல் வாக்கெடுப்பு மூலம் இது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
