
அமெரிக்காவின் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் தலாய் லாமாவின் பெயர் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு அவரது அலுவலகம் கடும் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தலாய் லாமா அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அண்மையில் வெளியான ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ (Epstein files) தொடர்பாக, திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புபடுத்தி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் சில செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
புனிதர் தலாய் லாமா, ஜெப்ரி எப்ஸ்டீனை ஒருபோதும் சந்தித்தது கிடையாது. அதேபோல், அவர் சார்பில் எப்ஸ்டீனைச் சந்திக்கவோ அல்லது அவருடன் தொடர்பு கொள்ளவோ யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதை நாங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது மற்றும் கடத்தியது தொடர்பான வழக்கில் சிக்கி, கடந்த 2019-ஆம் ஆண்டு சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். அவரது வழக்கை விசாரித்த அமெரிக்க நீதித்துறை, சமீபத்தில் சுமார் 30 லட்சம் ஆவணங்கள், ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது.
இந்த ஆவணங்களில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், எலான் மஸ்க் உள்ளிட்ட பல உலகப் புகழ்பெற்ற நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அந்தப் பட்டியலில் தலாய் லாமாவின் பெயரும் இருப்பதாகத் தகவல் பரவிய நிலையில், தற்போது அதற்கு அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த பலரின் பெயர்கள் பட்டியலில் இருந்தாலும், அவர்கள் அனைவரும் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் என்று கருதிவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
