ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவங்கள் இணைந்து இன்று அதிரடியாகப் பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு எதிராகப் போர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலடியாக, ஈரான் ராணுவம் இஸ்ரேலின் பல்வேறு பகுதிகள் மீதும், பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படைத் தளம் மீதும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இஸ்ரேலின் பல இடங்களில் ஈரானிய ஏவுகணைகள் விழுந்து வரும் நிலையில், அந்த இடங்களைப் புகைப்படம் எடுக்கவோ அல்லது வீடியோ எடுக்கவோ இஸ்ரேல் ராணுவம் மக்களுக்குக் கடும் தடை விதித்துள்ளது.
ஏவுகணைகள் விழுந்த துல்லியமான இடங்களை எதிரி நாடுகள் கண்டறிந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த ‘ராணுவத் தணிக்கை’அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
