மரகத கல்லின் சிறப்புகள் மற்றும் மரகத லிங்கம் அமைந்துள்ள இடங்களை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் .
சென்னை :அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது என்பது சித்தர்களின் வாக்கு. இந்த ஒரு வாக்கியத்திலேயே பல சாஸ்திர ரகசியங்களை ஒழித்து வைத்திருக்கிறார்கள் .ஆகாயத்தில் இருப்பவைகள் பூமியில் இருப்பவைகளோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நவகிரகங்களை நவரத்தின கற்களோடு தொடர்பு படுத்தி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அதாவது ஒவ்வொரு கிரகங்களின் நிறங்களுக்கு ஏற்ப ரத்தினங்களின் நிறங்களை நிர்ணயித்துள்ளனர் .
மரகத கல்லின் சிறப்புகள் ;
நவகிரகத்தின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் பகவானின் நிறம் பச்சையாகும். அதேபோல் நவரத்தின கற்களில் மரகதம் என்று ரிஷிகள் வகுத்துள்ளனர் .இந்த மரகத கல்லினால் செய்யப்பட்ட சிவ ஆலயங்களை வழிபாடு செய்தால் மனதில் நினைத்த காரியம் நடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு தான் ஆகாஷ்ன சக்தி அதிகம் உள்ளது. அதன்படி இந்த மரகத கல்லிற்கு அதீத சக்தி உள்ளதாக கூறப்படுகின்றது.
அதனை கண்களால் பார்த்து மனதால் நினைத்து வணங்கி வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள். மேலும் உத்தியோக உயர்வு, தொழில் விருத்தி, ஆரோக்கியம், பதவி உயர்வு என பல உயர்வுகளை பெரும் யோகம் கிடைக்கும் என ஜோதிட ரீதியாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்திரன் மரகத லிங்கத்தை வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றது. மேலும் மரகத கல்லினால் செய்யப்பட்ட சிவ ஆலயங்கள் 7 உள்ளது.
மரகத லிங்கம் அமைந்துள்ள கோவில்கள் ;
முசுக்குந்தா சக்கரவர்த்தி கடும் தவம் செய்து இந்திரனிடமிருந்து ஏழு விலை மதிப்பில்லாத மரகத லிங்கங்களை பெற்றார் என்றும் அந்த மரகத லிங்கம் வேதாரண்யம், திருக்குவளை, திருக்காரவாசல், திருவாரூர், திருநள்ளாறு , நாகப்பட்டினம், திருவாமூர் ஆகிய இடங்களில் மக்கள் வழிபாட்டிற்காக சிவ ஆலயங்கள் அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றது.
அதிலும் குறிப்பாக ராமநாதபுரத்தில் உள்ள உத்திரகோசை மங்கையில் இருக்கும் சிவன் கோவிலில் ஆறு அடி உயரமுள்ள நடராஜர் மரகத சிலை மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது .இந்த நடராஜர் சிலைக்கு வருடம் முழுவதும் சந்தனத்தினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.ஏனெனில் மரகதம் மிகவும் மென்மையான கல்லாகும். இதற்கு அதிக ஒளியை தாங்கும் சக்தி கிடையாது என்பதால் சந்தன காப்பு சாத்தப்பட்டிருக்கும். இந்த சந்தனத்தை பூசி கொள்வதால் பல மருத்துவ பலன்களும் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
மேலும் மதுரை மீனாட்சி அம்மனின் சிலையும் மரகத கற்களால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் இக்கோவிலின் அதிக அதிர்வலைகளை பெற்றுள்ளது என கூறப்படுகிறது . மேலும் கோவில்களில் மரகத லிங்கத்திற்கு செய்யப்படும் அபிஷேக பாலை அருந்துதல் மற்றும் அதில் சாத்தப்பட்டுள்ள சந்தனத்தை பூசிக் கொள்வதினால் பல மருத்துவ பலன்களும் உள்ளதாக நம்பப்படுகிறது.