தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது திமுக புதிதாக சென்னை மாவட்டத்துக்கான வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தின் தலைநகரான சென்னையின் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், ‘சென்னை சூப்பர்-6’ என்ற தலைப்பில் ‘திராவிட மாடல் 2.0’ புதிய தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
பொது வசதிகள், போக்குவரத்து, உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் என ஆறு முக்கிய பிரிவுகளின் கீழ் இந்த வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
1. மேம்படுத்தப்பட்ட பொது வசதிகள்:
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நலன் காக்க, ‘குடியிருப்போர் நல மகளிர் சங்கம்’ மூலம் அரசு நிதியுதவியுடன் கூடிய பொது வசதிகள் மேம்படுத்தப்படும்.
மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு RO சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். மேலும், கலை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்க உலகத்தரம் வாய்ந்த பண்பாட்டு மையம் அமைக்கப்படும்.
2. சென்னையின் போக்குவரத்து புரட்சி:
சென்னையின் ஒவ்வொரு தெருவையும் இணைக்கும் வகையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும். முக்கியமாக, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பயண நேரத்தை 25% வரை சேமிக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் போக்குவரத்து மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3. காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட உட்கட்டமைப்பு:
சென்னையின் முக்கிய திட்டங்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
2027: பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் முழுமை பெறும்.
2028: மெட்ரோ விரிவாக்கப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும்.
2029: உலகத்தரம் வாய்ந்த எழில்மிகு சாலை வசதிகள் மற்றும் அகலமான நடைபாதைகள் அமைக்கப்படும்.
4. கைவிடப்பட்ட நாய்கள் பாதுகாப்பு:
விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு (ABC) திட்டத்தின் கீழ் கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்த்தப்படும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விலங்குகளுக்கான விரிவுபடுத்தப்பட்ட காப்பகங்கள் உருவாக்கப்படும்.
5. உலகளாவிய சிறப்பு மையங்கள்:
AI, அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) மற்றும் கேமிங் துறைகளுக்காக ரூ. 10,000 கோடி முதலீட்டில் சிறப்பு மையம் அமைக்கப்படும். இதன் மூலம் 20,000 உயரிய ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. உலகளாவிய திறமைத் தளம் (Global Talent Gateway):
சென்னையை உலகளாவிய திறமைத் தளமாக மாற்ற, உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்புடன் கூடிய ஆராய்ச்சி மையங்கள் மற்றும் உயர் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம் இளைஞர்களுக்கு அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும்.

