அன்புமணிக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமனி நாளை உரிமை மீட்புப் பயணத்தை தொடங்க இருக்கிறார். சமூக நீதி, விவசாயம், நல்லாட்சி, கல்வி, அடிப்படை சேவைகள் உள்ளிட்ட தமிழக மக்களின் 10 உரிமைகளை மீட்டெடுத்து தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அன்புமணி நாளை இந்த பயணத்தை மேற்கொள்கிறார். அதன்படி முதல்கட்டமாக நாளை (ஜூலை 25)ம் தேதி தொடங்கும் பயணம் 100 நாட்கள் வரை நீட்டிக்கும். இந்த உரிமை மீட்பு நடை பயணத்திற்காக அன்புமணி தரப்பிலான பாமகவினர் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணிக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், அன்புமணி நாளை தொடங்க இருக்கும் ‘உரிமை மீட்பு’பயணத்தில் பாமக பெயர், கட்சிக் கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக்கோரி அவர் டிஜிபியிடம் மனு அளித்துள்ளார். இந்த நடை பயணத்தின் போது கட்சி பெயர் மற்றும் கொடியை அவர் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே ராமதாஸ் – அன்புமணி இடையே இருந்து வரும் மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் தந்தை, மகன் மோதலால் பாமக இரண்டுபட்டுக் கிடப்பதாக தொண்டர்கள் புலம்பி வரும் சூழலில், ராமதாஸ் டிஜிபியிடம் மனு அளித்திருப்பது நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருவதையே காட்டுகிறது.