டெல்லி : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.993 உயர்ந்துள்ளதைக் கண்டித்து, “தேர்தல் முடிந்த உடன் இந்திய மக்களுக்கு அனுப்பப்பட்ட முதல் பில் இது” என்று கூறினார்.எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, “நான் முன்பே சொன்னேன்… தேர்தல் முடிந்ததும் பணவீக்கத்தின் வெப்பம் அதிகரிக்கும் என்று.
இன்று வணிக சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.993 உயர்ந்துள்ளது. இது ஒரே நாளில் ஏற்பட்ட மிகப் பெரிய உயர்வு. இது தேர்தல் பில்.பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1,380 உயர்ந்துள்ளது. இது கடந்த 3 மாதங்களில் 81% உயர்வாகும்” என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி மேலும் கூறுகையில், “தேநீர் கடை, ஹோட்டல், பேக்கரி, இனிப்புக் கடை என அனைத்து சிறு வியாபாரங்களின் சமையலறையிலும் இந்த உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது உங்கள் தட்டிலும் (உணவு விலை) பாதிப்பை ஏற்படுத்தும். முதலில் எரிவாயு, அடுத்து பெட்ரோல்-டீசல் விலை உயரும்” என்று எச்சரித்தார்.
ஏப்ரல் 29ஆம் தேதி வரை பல மாநிலங்களில் (மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்டவை) தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் முன்பே விலை உயர்வு தொடங்கியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், “தேர்தல் நிவாரணம் முடிந்தது… இப்போது பணவீக்கத்தின் வெப்பம் வரப்போகிறது! ஏப்ரல் 29க்குப் பிறகு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்தும் விலை உயரும். எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது லாபத்தை மோடி அரசு தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டது.
இப்போது விலை உயர்ந்துள்ளதால் அதன் சுமையை மக்கள் மீது திணிக்கிறது. விலை குறைவாக இருந்தபோது கொள்ளையடித்த அரசு, இப்போது பணவீக்கத்தின் சுமையை மக்களிடம் தள்ளுகிறது” என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
