சமீபகாலங்களில் செல்லப்பிராணி வளர்ப்போர் மத்தியில் “டூடுல்” (Doodle) வகை நாய்கள் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பொருளாதார ரீதியில் உச்சத்தில் இருப்பவர்கள், பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் முதல் நடுத்தரக் குடும்பங்கள் வரை அதன் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இவை ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவை அல்ல; மாறாக, புத்திசாலித்தனத்திற்கு பெயர் பெற்ற பூடில் (Poodle) இனத்தை மற்றொரு நாய் இனத்துடன் கலப்பு செய்து உருவாக்கப்படும் “டிசைனர் நாய்கள் தான் டூடுல் ஆகும்.
டூடுல் நாய்களின் தோற்றம்:
ஆஸ்திரேலியாவில் 1980-களில் முதன்முதலில் “லேப்ரடூடுல்” (Labradoodle) உருவாக்கப்பட்டது.
கண்பார்வை அற்றவர்களுக்காக, முடி கொட்டாத (Allergy-friendly) ஒரு வழிகாட்டி நாயைத் தேடியபோது இந்த இனம் உருவானது.
அதன் வெற்றியைத் தொடர்ந்து, இன்று கோல்டன் டூடுல் (Golden doodle), பெர்னெ டூடுல் (Berne doodle) எனப் பல வகைகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் மே 1-ஆம் தேதி சர்வதேச டூடுல் நாய் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
2015-ஆம் ஆண்டு ஜென்னி நார்த் என்பவரால் தொடங்கப்பட்ட இந்தத் தினம், டூடுல் வளர்ப்பாளர்கள் ஒன்று கூடுவதற்கும், தங்கள் செல்லப் பிராணிகளுடன் நேரத்தைச் செலவிடுவதற்கு உருவாக்கப்பட்டது.
இந்த நாய்கள் ஏன் அதிகம் விரும்பப்படுகின்றன?
குறைவான முடி உதிர்தல்: பூடில் இனத்தின் மரபணு காரணமாக, இந்த நாய்களுக்கு முடி கொட்டுவது மிகக் குறைவு.
இதனால் ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை (Allergy) பிரச்சனை உள்ளவர்கள் தாராளமாக இவற்றை வளர்க்கலாம்.
அறிவுத் திறன்:
பூடில் மற்றும் ரெட்ரீவர் இனங்கள் இரண்டுமே அதிக புத்திசாலித்தனம் கொண்டவை.
எனவே, டூடுல் நாய்களுக்குப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுப்பது மிகவும் எளிது.
நட்பான குணம்:

இவை மனிதர்களிடமும், குறிப்பாகக் குழந்தைகளிடமும் மிகவும் மென்மையாகவும் அன்பாகவும் பழகக்கூடியவை.
சிறந்த ‘குடும்ப நாய்’ (Family Dog) எனும் தகுதி இருப்பதால், பலரும் இதை விரும்பி வளர்க்கின்றனர்.
பிரபலமான டூடுல் வகைகள்:
- கோல்டன் டூடுல்: கோல்டன் ரெட்ரீவர் + பூடில்.
- லேப்ர டூடுல்: லேப்ரடார் ரெட்ரீவர் + பூடில்.
- மால்டிபூ (Maltipoo): மால்டீஸ் + பூடில் (சிறிய வகை நாய்).
- காக்கபூ (Cockapoo): காக்கர் ஸ்பானியல் + பூடில்.
பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம்:
இந்த நாய்களுக்கு தினமும் உடற்பயிற்சி அவசியம். ஓடி விளையாடுவது மற்றும் நீண்ட தூர நடைப்பயிற்சி இவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
இவற்றுக்குச் சுருள் முடிகள் இருப்பதால், வாரத்திற்கு இரண்டு முறையாவது தலை சீவுவது அவசியம்.
சரியான உணவு மற்றும் சீரான மருத்துவப் பரிசோதனை மூலம் இவை 12 முதல் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
F1, F1B என்றால் என்ன?
டூடுல் நாய்கள் வாங்கும் போது, அவை எந்தத் தலைமுறையைச் சேர்ந்தவை என்பது முக்கியமாக கவனிக்கப்படுகிறது.
- F1: இது ஒரு தூய இன நாய்க்கும் (உதாரணமாக லேப்ரடார்) ஒரு தூய பூடிலுக்கும் பிறக்கும் முதல் தலைமுறையைக் குறிக்கும்.
- F1B: ஒரு டூடுல் நாய்க்கும் ஒரு தூய பூடிலுக்கும் பிறக்கும் குட்டி. இவற்றின் உடலில் 75% பூடில் மரபணு இருப்பதால், முடி கொட்டும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.
மனநிலை மற்றும் தேவைகள்:
டூடுல் நாய்கள் மனிதர்களின் அருகாமையை அதிகம் விரும்புபவை.
எனவே, நீண்ட நேரம் அவற்றை வீட்டில் தனியாக விட்டால், அவை கவலைக்குள்ளாகிப் பொருட்களைக் கடிக்கத் தொடங்கலாம் (Separation Anxiety).
விலை விவரம்:
இவை “டிசைனர் நாய்கள்” என்பதால் சர்வதேச சந்தையில் இவற்றின் விலை அதிகம். ஒரு தரமான குட்டியின் விலை $1,000 முதல் $3,000 (சுமார் ₹80,000 முதல் ₹2.5 லட்சம் வரை) இருக்கலாம்.
ஆரோக்கியம்:
இவை கலப்பு இனங்கள் என்பதால், பொதுவாக தூய இன நாய்களை விட அதிக ஆரோக்கியத்துடன் இருக்கும்.
இருப்பினும், இவற்றுக்குக் காதுத் தொற்று மற்றும் இடுப்பு எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதால், கவனமாக பராமரிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
டூடுல் நாய்கள் அவற்றின் தோற்றத்திற்காகவும், மென்மையான குணத்திற்காகவும் “சர்வதேச செல்லப்பிராணி” அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
ஒரு சிறந்த நண்பனைப் போலவும், பாதுகாப்பு அரணாகவும் இருக்கக் கூடிய இந்த நாய்கள், நவீன கால நாய் வளர்ப்பில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.
– யாழினி சோமு
