அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், தானும் போட்டியிட்டிருந்தால் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்போம் என டிரம்ப் கூறியுள்ளார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், இருதரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சி, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
டிரம்ப் குடும்பத்தின் தொழில் நடவடிக்கைகளில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகார்கள், குடியேற்ற அமலாக்கத்துறையின் அத்துமீறல்கள் மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் குறித்து விசாரிக்கப்படும் என பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள ராபர்ட் கார்சியா தெரிவித்துள்ளார். விசாரணையை எதிர்கொள்ள இருப்பவர்கள் வழக்கறிஞர்களை தயார்படுத்திக்கொள்ளுமாறும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் வெற்றி பெற்றுள்ளனர். புளோரிடா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியின் பியா தண்டியா, 51 புள்ளி 87 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். வர்ஜீனியாவில் சுஹாஸ் சுப்பிரமணியம், வாஷிங்டனில் பிரமிளா ஜெயபால் ஆகியோர் மீண்டும் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் ஒஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில், டிரம்ப் ஆதரவு பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி தோல்வியடைந்துள்ளார். குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட அவரை எதிர்த்து, ஜனநாயகக் கட்சியின் ஏமி ஆக்டன் வெற்றி பெற்றுள்ளார். ஒஹியோவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சி ஆளுநர் பதவியைக் கைப்பற்றியுள்ளது. மேலும், அம்மாகாணத்தின் முதல் பெண் ஆளுநராக ஏமி ஆக்டன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாண செனட் தேர்தலில், 94 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய செனட் உறுப்பினர் ரோஜர் மார்ஷலை, ஜனநாயகக் கட்சியின் ஆடம் ஹாமில்டன் தோற்கடித்துள்ளார். 1932ஆம் ஆண்டுக்குப் பிறகு கன்சாஸில் ஜனநாயகக் கட்சி பெற்ற முதல் செனட் வெற்றி இதுவாகும். விலைவாசி உயர்வு, டிரம்பின் வரிவிதிப்புக் கொள்கைகள் உள்ளிட்டவற்றை முன்வைத்து ஹாமில்டன் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
