அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த தலைவர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அதிரடி கூட்டறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட 28 முக்கிய நிர்வாகிகளும் தொடர்ந்து அதே பதவிகளில் நீடிப்பார்கள் என்று அறிவித்துள்ள அவர்கள், கட்சியின் சட்டவிதிகளின்படி இந்த நீக்கம் செல்லாது என ஆணித்தரமாகக் கூறியுள்ளனர். “கட்சியில் பிளவு ஏற்பட அச்சாரமே இபிஎஸ் தான்” என நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ள இந்தத் தலைவர்கள், தன்னிச்சையாகப் புதிய பதவிகளை அறிவிக்கவோ அல்லது நியமனம் செய்யவோ இபிஎஸ்-க்கு அதிகாரம் கிடையாது என்றும் எச்சரித்துள்ளனர்.
எடப்பாடியின் நம்பிக்கைக்குரியவர்களாகக் கருதப்பட்டவர்களே தற்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளதால், அதிமுகவின் தலைமை அதிகாரம் யாருக்கு என்பதில் மீண்டும் ஒரு தர்மயுத்தம் தொடங்கியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
