தன் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு ஜோதிடர் ராதன் பண்டிட் மிகவும் ஆவேசமாகவும் உருக்கமாகவும் பதிலளித்துள்ளார். தனது ஆரம்பகால வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை வெளிப்படுத்திய அவர், சொந்த ஊரான ஊத்துக்குளியில் மூன்று மாதங்கள் சுடுகாட்டிலேயே தங்கித் தூங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகக் கூறி அதிர வைத்துள்ளார்.
“சிவபெருமானே மனைவியைப் பிரிந்து பிச்சை எடுத்திருக்கிறார், என் வாழ்க்கையிலும் சோகமும் வலியும் இருந்தது உண்மைதான்; ஆனால் எத்தனை கஷ்டங்கள் வந்தபோதும் நான் ஒருபோதும் தவறு செய்ததில்லை” என்று அவர் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இதுவரை தனது ஜோதிடப் பயணத்தில் சுமார் 25,000 பெண்களைச் சந்தித்திருப்பதாகவும், அவர்களைச் சகோதரி என்ற கண்ணோட்டத்தைத் தாண்டித் தான் ஒருபோதும் தவறான பார்வையில் பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
தன் மீது இதுவரை எந்த ஒரு காவல் நிலையத்திலும் (FIR) வழக்குப் பதியப்படவில்லை என்பதையும், வருமான வரித்துறை (IT) சோதனையைத் தவிர வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் உண்மையில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மற்றவர்களின் வாழ்க்கையிலுள்ள வலிகளையும் அசிங்கங்களையும் தோண்டி எடுப்பது தவறு என்றும், அவற்றைக் கடந்து தான் இன்று அடைந்துள்ள வெற்றியை மட்டும் பாருங்கள் என்றும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
