“ஜெயலலிதா ஆத்மா தண்டனை கொடுக்குது!” – எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய அமைச்சர் செங்கோட்டையன்.. கோவை ஏர்போர்ட்டில் அதிரடிப் பேட்டி..!!” 

Estimated read time 0 min read

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல், பணமே இல்லாமல் தேர்தலைச் சந்தித்த புதிய வரலாற்றை முதல்வர் விஜய் உருவாக்கி காட்டியுள்ளார் என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் விரும்பிய ஒரு தூய்மையான, மக்கள் வியக்கத்தக்க நல்லாட்சியைத் தமிழக வெற்றிக் கழகம் வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்ற வரலாற்றைப் படைக்க விஜய் ஒருவரால் தான் முடியும் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு, மதுக்கடைகள் அகற்றம் போன்ற தற்போதைய அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளன என்றும் அவர் கூறினார்.

அதிமுக இரு அணிகளாகப் பிரிந்து சரிவைச் சந்தித்திருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், மக்கள் மீதும் தலைவர்கள் மீதும் அக்கறை இல்லாதவர்களுக்குத்தான் இந்த நிலை ஏற்படும் என்றார்.

அத்திக்கடவு அவிநாசி திட்டம் வந்தபோது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் தேவையில்லை, தன் படம் மட்டும் போதும் எனப் பாராட்டு விழா நடத்திக் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என்று விமர்சித்த செங்கோட்டையன், இன்றைக்கும் ஜெயலலிதாவின் படத்தை நான் என் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன் என்றும் கூறினார்.

தன் படம் மட்டும் போதும் என்று சுயநலத்தோடு நினைத்த எடப்பாடி பழனிசாமியின் கனவு தற்போது தூள் தூளாக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவின் ஆத்மா அவருக்குத் தண்டனை கொடுத்துக் கொண்டிருப்பதை இந்த நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

You May Also Like

More From Author