அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பின் சீனப் பயணம் உலகளவில் அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளது. 2017ஆம் ஆண்டில், அவர் முதன்முறையாக சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது, அவருடன் இணைந்து சீனாவில் பயணம் மேற்கொண்ட வணிகப் பிரதிநிதிக் குழுவினர்களுடன் ஒப்பிடுகையில், தற்போதைய டிரம்பின் பயணத்தில் இடம்பெற்றுள்ள இப்பிரதிநிதிக் குழுவினர்களில் உயர் அறிவியல் தொழில் நுட்பம், நாணயம் முதலிய தொழில் துறைகள் சார்ந்தோர் மேலதிகமான பங்கு பெற்றுள்ளனர்.
இரு நாட்டு அரசுத் தலைவர்கள் வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தையை நடத்தினர் என்றும், அமெரிக்க-சீன பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்குப் புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வருவர் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் சி.எம்.ஜி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது கூறுகையில், சீனா, உலகின் மிகவும் அற்புதமான நாடுகளில் ஒன்றாகும். இங்கு புத்தாக்கச் சாதனைகள் மிகவும் அதிகம். செயற்கை நுண்ணறிவுத் தொழில் துறை ரீதியில் உலகளவில் முன்னணியில் உள்ளதோடு, இத்துறையில் சீனா சீராக முன்னேறி வருகிறது என்றார்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம். குக் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது கூறுகையில், சீனச் சந்தை மிகவும் வலிமையானது. நுண்ணறிவு மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் மீது சீன மக்கள் அதிகமான ஆர்வம் காட்டி, அவற்றை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றனர். இதனை நான் மிகவும் உற்சாகத்துடன் உணர்ந்து கொண்டுள்ளேன் என்றார்.
அமெரிக்காவின் தொழில் முனைவோர் பலர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது கூறுகையில், சீனச் சந்தையில் மிகுந்த கவனம் செலுத்தி, சீனாவுடான ஒத்துழைப்பை வலுப்படுத்த எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தனர். சீனாவின் வெளிநாட்டுத் திறப்புப் பணி மென்மேலும் விரிவாகி வருவதால், சீனாவிலுள்ள அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் மேலதிகமான வளர்ச்சி வாய்ப்புகளைக் கண்டுபிடிக்கலாம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
