அட்ட வீட்டத் தலங்கள் என்று போற்றப்படுகிற எட்டு வீரத்தலங்களில் சிவபெருமான் திரிபுரம் எரித்த வீரச் செயல் செய்த திருத்தலமே திருவதிகை வீரட்டானம்.
இது பழைய தமிழ்நாட்டில், நடுநாடு எனப்படும் பகுதியில் உள்ள சிவத் தலங்களில் ஏழாவதாக அமையும் திருத்தலம் .
அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார்.
வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர்.
இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன.
முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் மக்களுக்கு மிகவும் கொடுமைகள் செய்து வந்தனர்.
இவர்களின் தொல்லை தாங்கவும் முடியாமல் , பொறுக்கவும் முடியாமல் என்ன செய்வதென்று அறியாமல் தம்மை காப்பாற்ற இறைவனே கதி என்று உணர்ந்து ,சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
தேவர்களுக்குக் கருணை செய்ய சங்கல்பம் செய்தார் சிவபெருமான்.
“கல் ஆல் நிழல் கீழாய் இடர் காவாய் என வானோர்
எல்லாம் ஒரு தேராய் அயன் மறைபூட்டி நின் று உய்ப்ப
வல்லாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல்
வில்லால் எயில் எய்தான் இடம் வீழிம் மிழலையே” என்று திருஞானசம்பந்தர் பெருமான் அருளியதுபோல்,
சூரிய சந்திரரர்கள் தேர்ச் சக்கரங்களாகவும், பிரமன் சாரதியாகவும்,வேதங்கள் குதிரைகளாகவும் திகழ
காற்றுப் போன்று வேகமாகச் செல்லும் எரிக்கும் நெருப்பைக் கொண்டு,திருமாலாகிய அம்பினால்,
மேருமலையயை வில்லாகவும், வாசுகி எண்ணும் பாம்பை நாணாகவும்,
கொண்டு அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்தான். இறைவன் தம்மால் தான் முப்புரங்களை அழிக்கப் போகிறான் என்று ஒவ்வொருவரும் தமக்கும் கர்வம் கொள்ளத் தொடங்கினார்கள்.
எல்லவற்றிக்குள்ளும் இருக்கும் எம்பெருமான் எல்லாவற்றையும் அறிந்து, எவ்வளவு பாடம் நடத்தியும் இவர்கள் இப்படி ஆணவத்தில் அறிவு மயங்கி நிற்கிறார்களே என்று ஏளனமாக புன்னகைத்தான்.
அவ்வளவுதான் மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாயின.
இந்த வரலாறு மட்டும் இன்றி ஏழாம் சைவ சமய ஆச்சாரியர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் பெருமானின் தமக்கையார் திலகவதியார் இடைவிடாது திருத்தொண்டு செய்ததும் இந்த இந்தத் திருத்தலத்தில் தான். அப்பருக்கு சூலை நோய் தந்து அவரை எம்பெருமான் ஆட்கொண்டு அருளியதும் இந்தப் புண்ணியத் தலத்தில் தான்.
அதுமட்டுமின்றி சிவபெருமான் ,சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருவடி தீட்சை கொடுத்ததும் இந்தத் திருத்தலத்தில் தான்.
சைவ சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கில் “உண்மை விளக்கம்” என்னும் ஆகம நூலை செய்த மனவாசகங் கடந்தார் அவதாரம் செய்ததும், ஆகம நூலை செய்ததும் இந்தத் திருத்தலத்தில்தான்.
தென் கங்கை எனப்படும் கெடிலநதி, ஆல கங்கை, சக்கரத் தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ள இக்கோவிலில், பங்குனியில் வசந்தோற்சவமும், சித்திரையில் அப்பர் குருபூஜையும், வைகாசியில் பிரம்மோற்சவமும் வெகு விமர்சையாக நடைபெறும் வரிசையில் சித்திரை பெருவிழா திருத்தேரோட்டம் நடக்கும் நாளில்தான் திரிபுர தகன உத்ஸவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது.
இந்த தலத்து இறைவனை திருவதிகை வீரட்டானேஸ்வரரை வணங்கி வழிபட்டால், முன்ஜென்ம வினைகள் எல்லாம் நீங்கி வாழ்வில் பெரும் வெற்றியும், நிலைத்த செல்வமும், நீடித்த புகழும் நிச்சயம் கிடைக்கும் என்பது சாத்திரம்.