பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த மூன்று நாட்களாக நீடிக்கும் வன்முறை போராட்டங்களால் அப்பகுதி பெரும் பதற்றத்தில் உள்ளது. PoK சட்டமன்றத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் காஷ்மீரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 12 இடங்களை ரத்து செய்ய வேண்டும் என ‘மக்கள் நடவடிக்கைக் குழு’ வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு அரசு செவிசாய்க்காததால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்தப் போராட்டத்தில் நான்கு காவலர்கள் மற்றும் ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டும், எழுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். அரசு தரப்பில் இந்தக் குழுவின் மீது தடை விதிக்கப்பட்டு, உறுப்பினர்கள் மீது பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒன்பது மாதங்களுக்கு முன்பே இது தொடர்பாக அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தற்போது மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர். அரசுக்கு எதிராகப் போராட்டங்களைத் தூண்டி நாசவேலைகளில் ஈடுபட அந்தக் குழு திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் ஃபைசல் மும்தாஜ் ரத்தோர் குற்றம் சாட்டியுள்ளார்.
PoK-ஐ இரண்டாகப் பிரிக்க இந்தக் குழு சதி செய்வதாகவும், அமைதியான பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றால் அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் நடவடிக்கைக் குழு உறுதியாகக் கூறியுள்ளது.
