சீன நவீனமயமாக்கத்திற்கு முக்கிய உந்து சக்தியாகத் திகழும் அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கம்
2024ஆம் ஆண்டு, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75-ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த 75 ஆண்டுகளில், செயற்கைக்கோள் ஆராய்ச்சி, ஷென்சோ விண்கலம், ஃபெங்டாவ்ஜெ எனும் ஆழ்கடல் ஆய்வுக்கலன், சாங்ஏ சந்திரன் ஆய்வுத் திட்டம், தியன்கோங் விண்வெளி நிலையம், பெய்தாவ் புவியிடங்காட்டி அமைப்பு, ஜியுஜாங் குவாண்டம் கணினி, அதிவேக தொடர்வண்டி ஆகிய துறைகளில் சீனா உலகளவில் முன்னணி சாதனைகளைப் படைத்துள்ளது. தலைமுறைத் தலைமுறையாக விடா முயற்சியுடன், உலகின் அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கத்தில் ஒரு முக்கிய துருவமாக சீனா மாறியுள்ளது. இதனிடையில், உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு வெளியிட்ட 2024ஆம் ஆண்டு உலக புத்தாக்க குறியீட்டு அறிக்கையில், சீனா ஓரிடம் உயர்ந்து, உலகின் 11ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளையில், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு மத்தியில், இந்த வரிசையின் முதல் 30 இடங்களுக்குள் நுழைந்த ஒரேயொரு நாடு சீனா மட்டுமேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கம், சீன நவீனமயமாக்கலுக்கு மிக முக்கியமான உந்து சக்தியாகத் திகழ்கிறது. அது மட்டுல்லாமல், உலகின் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்துறையின் நுண்ணறிவுத்திறன் மேம்பாட்டையும் முன்னேற்றி வருகிறது. சீனா இத்தகைய வெற்றி பெறுவதற்கான ரகசியங்கள் பற்றி ரஷிய அறிவியல் மன்றத்தின் சீன மற்றும் நவீன ஆசியாவுக்கான ஆய்வகத்தின் இயக்குநர் கிரில் பாபாயெவ் கூறுகையில், நீண்டகால திட்ட வரைவுகளை உருவாக்கும் திறன், அரசாங்கமும் நாட்டுமக்களும் திட்டங்களைச் செயல்படுத்தும் வலுவான திறன் ஆகியவைகளே சீனாவின் சாதனைகளுக்கான முக்கிய ஆதாரமாகும் என்பதைச் சுட்டிக்காட்டினார். இத்தகைய சாதனைகளைப் பார்க்கும்போது, நவீனமயமாக்கலை நனவாக்கும் சரியான வழியில் சீனா முன்னேறி செல்கின்றது என்னும் நம்பிக்கை உருவாகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.