வார இறுதி நாட்களில் ஓடிடியில் எந்தப் படத்தை பார்ப்பது என்று யோசிப்பவர்களுக்காக, மலையாள சினிமாவில் வெளியாகி வசூலிலும் புகழிலும் மிகப்பெரிய சாதனையைப் படைத்த ஒரு மிரட்டலான திகில் திரைப்படம் பரிந்துரைக்கப்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு ராகுல் சதாசிவம் இயக்கத்தில் மெகா ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘பிரம்மயுகம்’ திரைப்படம் தான் அது. வெறும் 4 கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டு முழுநீள த்ரில்லராக உருவாக்கப்பட்ட இந்தப் படம், பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை சீட் நுனியில் அமர வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
17-ம் நூற்றாண்டுப் பின்னணியில் கேரளாவின் தெற்கு மலபார் வனப்பகுதியில் வழிதறிச் செல்லும் தேவன் (அர்ஜுன் அசோகன்) என்ற இளைஞர், எதிர்பாராதவிதமாக கொடுமன் பொட்டி (மம்மூட்டி) என்பவருக்குச் சொந்தமான ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வீட்டுக்குள் தஞ்சம் புகுவதுதான் படத்தின் கதை.
அங்கு காலடி வைத்த முதல் நாளே தொடங்கும் விசித்திரமான மற்றும் மர்மமான நிகழ்வுகள் அந்த இளைஞரை உலுக்கி எடுக்கின்றன. அந்த வீட்டிலிருந்து தப்பிக்க அவர் மேற்கொள்ளும் தொடர் முயற்சிகள் தோல்வியைச் சந்திக்க, அந்தப் பங்களாவிற்குள் அப்படி என்னதான் ரகசியம் மறைந்துள்ளது என்பதைப் பார்ப்பவர்களைப் சிலிர்க்க வைக்கும் வகையில் இப்படம் விவரிக்கிறது.
முழுக்க முழுக்கக் கறுப்பு வெள்ளைக் கலர்களில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், மம்மூட்டியின் அச்சுறுத்தும் தோற்றம் மற்றும் மிரட்டலான பின்னணி இசை மூலம் ரசிகர்களை வேறு உலகத்திற்கே அழைத்துச் செல்கிறது.
வெறும் 27 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு உலக அளவில் சுமார் 85 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ள இந்தப் படம், தற்போது ‘சோனி லிவ்’ ஓடிடி தளத்தில் தமிழிலும் காணக் கிடைக்கிறது. இப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மம்மூட்டிக்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
