முன்னாள் திமுக அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜியை தொடர்ந்து தா.மோ. அன்பரசன் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார். நில ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2024 தேர்தல் பணிமனைக்காக தந்த இடத்தை தர மறுப்பதாக முதல்வர் தனிப்பிரிவில் PCM Sons என்ற நிறுவனத்தை சேர்ந்த ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் புகார் அளித்துள்ளார். தா.மோ. அன்பரசனின் உதவியாளர் அறிவுறுத்ததால் தந்த இடத்திற்கு 2 ஆண்டுகளாக வாடகைகூட தரவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக தன் சொத்தை லீசுக்கு எடுத்திருப்பதை சமீபத்திலேயேதான் நான் அறிந்தேன் என்றும் ராஜேஷ் சோமசுந்தரம் கூறியுள்ளார்.
சென்னை செயின்ட் தாமஸ் மவுண்டில் உள்ள 5,500 சதுர அடி தனியார் நிலம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக அலுவலகமாக 6 மாத குத்தகைக்கு எடுக்கப்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. குத்தகை காலம் முடிந்தும் இடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும், குத்தகை ஒப்பந்தத்தில் குறிப்பிட்ப்பட்ட நபரின் முகவரி போலியானது என்றும், இதுவரை எந்த வாடகையும் செலுத்தப்படவில்லை என்றும், நிலத்தை நிரந்தரமாக வைத்துக்கொள்ள முயற்சி நடந்ததாகவும், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் PCM Sons நிறுவனத்தின் ராஜேஷ் சோமசுந்தரம் முதல்வரிடம் புகார் அளித்துள்ளார்.
