ஆற்றில் கவிழ்ந்து நாசமான ரூ.3.97 கோடி மதிப்புள்ள குடிநீர் தொட்டி

Estimated read time 1 min read

உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரசுத் திட்டங்களையும் விட்டுவைக்கவில்லை.

பரேலி மாவட்டம் ஷெர்கட் தொகுதியில் உள்ள பைரம்கர் கிராம பஞ்சாயத்தில், ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் அப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க பிரம்மாண்டமான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வந்தது. சுமார் 3.97 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வந்த இந்தத் தொட்டி, திடீரென கிச்சாவில் ஏற்பட்ட கடுமையான நில அரிப்பு காரணமாக ஆற்றுக்குள் சரிந்து விழுந்துள்ளது.

கடந்த வாரம் கிச்சாவில் திடீரென நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து, ஆற்றின் கரைகளில் பயங்கரமான அரிப்பு ஏற்பட்டது. கடந்த வியாழக்கிழமையன்று, அந்த நீர்த்தேக்கத் தொட்டியைச் சுற்றியிருந்த பாதுகாப்புச் சுவரே ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கிருந்த சோலார் பேனல்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை டிராக்டர்களில் ஏற்றி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். இருப்பினும், தண்ணீரின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் அந்தப் பிரம்மாண்டத் தொட்டி நிலை குலைந்து ஆற்றுக்குள் உருண்டு விழுந்தது.

இதுகுறித்து பேசிய கிராமத் தலைவர் ஷம்சூல் கான், “இந்தத் தொட்டியைக் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டபோது, கிச்சா ஆறு இங்கிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஏற்பட்ட தொடர் அரிப்பு காரணமாக ஆறு மெல்ல மெல்ல தொட்டியை நோக்கி வந்துவிட்டது” என்றார். ஆறு தங்கள் கிராமத்தை நெருங்குவதைக் கண்ட ஊடக மக்கள், அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், கரையைப் பலப்படுத்த கற்கள் பதிக்கக் கோரியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த கிராமத்தில் ஏற்கனவே ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டு, சுமார் 70 சதவீத வீடுகளுக்கு குழாய் இணைப்புகளும் வழங்கப்பட்டுவிட்டன. விரைவில் தங்கள் வீட்டுக் குழாய்களில் சுத்தமான குடிநீர் வரும் என்ற கிராம மக்களின் நீண்ட நாள் கனவு, இப்போது ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தற்போது அங்கே எஞ்சியிருப்பது ஒரே ஒரு சிறிய அறை மட்டுமே, அதுவும் ஆற்று அரிப்பின் பிடியில் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

You May Also Like

More From Author