தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் டிசம்பர் 16-ம் தேதி முதல் 18 -ம் தேதி வரை கனமழையின் காரணமாக பொது மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
5 மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
அதேபோன்று, திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் தொடர் மழை வெள்ளம் காரணமாக, மூங்கிலடி, மேலப்பத்தை, கலுங்கடி, பத்மநேரி, புலியூர்குறிச்சி, மாவடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. இதில், மொத்தம் 25 -க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. பல கிராமங்கள் தனித்தீவுகளாக மாறியது.
இதனிடையே, நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணை முழு கொள்ளவான 118 அடியை எட்டியுள்ளது. இதனால், அணையில் இருந்து உபரி நீர் 1500 முதல் 2000 கன அடி வரை தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆற்றங்கரையோரம் உள்ள பொதுமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.