அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் மோடி டிசம்பர் 30ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அயோத்தியில் விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
அயோத்தியில் விமான ஓடுதளம் மிகவும் சிறியது என்பது அனைவரும் அறிந்ததே. இங்கு 178 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்தது. இவ்வளவு சிறிய பகுதியில் பெரிய சர்வதேச விமான நிலையம் அமைக்க முடியாது.
மாநில அரசு 821 ஏக்கர் நிலம் வழங்கியதை அடுத்து, புதிய விமான நிலையத்தை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் செயல்பட்டு வருகிறது. டிசம்பர் 15ஆம் தேதிக்குள் புதிய விமான நிலையம் தயாராகிவிடும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அயோத்தி விமான நிலையத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி முதல் விமானப்போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி டிசம்பர் 30ஆம் தேதி முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
டெல்லி, அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் கோவா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளது.