சீனாவை எதிர்கொள்ள வேண்டும் என்றால் உற்பத்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஊடகவியலாளர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார். அப்போது சீனாவுடன் எல்லைப் பிரச்சினை மட்டுமல்ல. முக்கிய பொருளாதார பிரச்சினைகளும் உள்ளன என்றார்.
சீனாவை நீங்கள் சமாளிக்க வேண்டும் என்றால், அதற்கு ஏற்ற பொருளாதாரம் இருக்க வேண்டும். கடந்த தசாப்தத்தில்தான் சீனாவுக்கு எதிராக இந்தியா தனது உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2020ஆம் ஆண்டு கல்வான் மோதல்களுக்கு பிறகு சீனாவுடனான உறவு மோசமடைந்தாலும், காலப்போக்கில் பதற்றம் உருவாகி வருவதாக அவர் குறிப்பிட்டார். சீனாவுடனான ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை குறித்து டாக்டர் ஜெய்சங்கர் கூறுகையில், இரு படைகளும் முன்னோக்கி நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், எல்லை ரோந்து பணியில் சிக்கல்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.