மூவர்ண கொடி நம் பெருமை..!: ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு!

Estimated read time 1 min read

இந்தியாவின் தேசியக் கொடி, நம் நாட்டின் பெருமை என்றும், நம் தேசத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்குவதற்கு தொடர்ச்சியான உத்வேகம் அளிக்கும் ஆதாரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது, வீடுதோறும் மூவர்ணக் கொடியேற்றும் இயக்கம்(ஹர் கர் திரங்கா) தொடங்கப்பட்டது.

அதன்பிறகு ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும், கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் தானாக முன்வந்து தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடும் ஒரு வருடாந்திர மரபாக மாறிவிட்டது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நமது மூவர்ணக் கொடி, நமது பெருமை. நாட்டிற்காக நமது சிறந்த பங்களிப்பை வழங்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளது. நாம் அனைவரும் #HarGharTiranga இயக்கத்தில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்போம்.

மேலும், வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கு பங்காற்றுவதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தை மீண்டும் புதுப்பிப்போம்.

மேலும், தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடல், 150ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இந்த தருணத்தில், இந்த ஆண்டின் முயற்சிகளை வந்தே மாதரம் பாடலுக்கு அர்ப்பணித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு ஆண்டிற்கான ‘ஹர் கர் திரங்கா'(வீடு தோறும் மூவர்ணக் கொடி இயக்கம்) இயக்கம், கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது நாடு முழுவதும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல், ஆகஸ்ட் 17ஆம் வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் பங்களிப்பு இயக்கங்களில் ஒன்றாக இந்த பிரச்சாரம் உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சாரத்தின் மூலம், பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பெருமையுடன் ஏற்ற வேண்டும் என்றும், தேசபக்தி மற்றும் தேசிய ஒற்றுமையின் உணர்வைக் கொண்டாடும் வகையிலான பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author