11 வருஷத்திற்கு பின் அமெரிக்க மண்ணில் காலடி வைத்த சீன அதிபர்…!

Estimated read time 1 min read

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பனிப்போர்கள் உலக அறிந்ததே. ஆனால், அதையெல்லாம் தாண்டி சீன அதிபர் ஷி ஜின்பிங் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ளனர். விமானக் கதவுகள் திறந்ததும், ஷி ஜின்பிங் தன் மனைவி பெங் லியுவான் கைகளைப் பிடித்துக்கொண்டு படிக்கட்டுகளில் இறங்கி வந்தபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மெலானியாவுடன் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றார்.

வரவேற்பு வெறும் கைகுலுக்கலோடு நின்றுவிடவில்லை. அமெரிக்க ராணுவத்தின் 479 வீரர்கள் அணிவகுத்து நிற்க, இரு நாடுகளின் தேசிய கீதங்கள் முழங்கின. அந்தச் சமயத்தில், திடீரென வானில் சீறிப்பாய்ந்த இரண்டு பி-1 பாம்பர் விமானங்கள் இரு தலைவர்களுக்கும் ராணுவ மரியாதையுடன் வானில் சல்யூட் அடித்தன. அந்த அதிநவீன குண்டுவீச்சு விமானங்களின் காதுகளைப் பிளக்கும் பேரிகை போன்ற சத்தத்தைக் கேட்டு ட்ரம்ப் சற்றே அசெளகரியமாக அசைந்தாலும், ஷி ஜின்பிங் எவ்வித சலனமுமின்றி பாறையைப் போல அமைதியாக நின்றது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இந்த பி-1 பாம்பர் விமானங்கள் அமெரிக்காவின் மிக வலிமையான ராணுவ சக்திகளில் ஒன்றாகும். இதற்கு முன்பு விளாடிமிர் புதின் அமெரிக்கா வந்தபோதும் இதேபோன்ற பிரம்மாண்ட மிரட்டல் வரவேற்புதான் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பு வெறும் கைகுலுக்கலோடு முடிந்துவிடாது. இதன் பின்னால் பெரிய ராஜதந்திர ஆட்டமே ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, தைவான் விவகாரத்தில் ஷி ஜின்பிங் கடுமையான மற்றும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 1982 ஆம் ஆண்டு கையெழுத்தான அமெரிக்க-சீனா ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி, தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ட்ரம்பிற்கு கடும் அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளார் ஜின்பிங்.

அதே சமயம், மறுபுறம் உலக அமைதிக்கான சாதகமான சூழலும் இதில் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் கொழுந்துவிட்டு எரியும் போரை அணைக்க, ஈரான் மீது சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுக்க அமெரிக்காவிற்கு உதவக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஒட்டுமொத்த உலக நாடுகளும் உற்றுநோக்கும் இந்தச் சந்திப்பு, உலக அரசியலின் அடுத்த கட்ட திசையைத் தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

You May Also Like

More From Author