இந்தியா முழுவதும் பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பால் உற்பத்தி கடுமையாக சரிந்து வருகிறது. இதனால், தனியார் பால் நிறுவனங்கள் வணிகத்தை தக்க வைக்கவும், உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
அண்மையில் ஆரோக்கியா நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ₹4 வரை உயர்த்திய நிலையில், தற்போது மற்ற நிறுவனங்களும் விலை உயர்வுப் பாதையில் இணைந்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக, டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, சீனிவாசா உள்ளிட்ட பிற முன்னணித் தனியார் பால் நிறுவனங்களும் சனிக்கிழமை முதல் விற்பனை விலையை லிட்டருக்கு ₹4 வரை உயர்த்த அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. புதிய விலை உயர்வின்படி:
சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk): 500 மில்லி பாக்கெட் ₹31-லிருந்து ₹32 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ₹59-லிருந்து ₹61 ஆகவும் உயர்ந்துள்ளது.
நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardised Milk): 500 மில்லி பாக்கெட் ₹35-லிருந்து ₹37 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ₹68-லிருந்து ₹70 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.
கொழுப்புச் சத்து செறிவூட்டப்பட்ட பால் (Full Cream Milk): 500 ₹40-லிருந்து ₹42 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ₹78-லிருந்து ₹81 ஆகவும் அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது.
தயிர் வில மாற்றம்: 500 கிராம் தயிர் பாக்கெட் விலையில் ₹1 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் விலை உயர்வு காரணமாக, அரசு கூட்டுறவு நிறுவனமான ஆவின் பாலின் விற்பனை விலைக்கும், தனியார் நிறுவனங்களின் விற்பனை விலைக்கும் இடையே லிட்டருக்கு ₹14 முதல் அதிகபட்சமாக ₹30 வரை பிரம்மாண்ட விலை வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.
