ஆசிய விளையாட்டில், கபடி போட்டியில் இந்திய மகளிரணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் கபடி இறுதிப் போட்டியில் இந்தியாவும், ஈரானும் மோதின. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. இறுதியில் 37க்கு 34 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானை இந்திய அணி வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்றதும் இந்திய வீராங்கனைகள் தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் பிரிவில், இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்திய வீராங்கனைகள் திலோத்தமா சென், விதர்ஷா வினோத், ஆஷி சௌக்சே ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினர். இதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் இந்திய அணி வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இதே போல், ஆடவர் மாரத்தான் போட்டியில் இந்திய வீரர் சவான் பர்வால் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 42.1 கிலோ மீட்டர் தூரத்தை, 2 மணி நேரம் 11 நிமிடங்கள் 37 நொடிகளில் கடந்து இரண்டாம் இடத்தை பிடித்த சவான் பர்வால், 48 நொடிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவற விட்டார்.
1982ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டில், மாரத்தான் போட்டியில் பதக்கம் வென்ற நிலையில், 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பதக்கம் வென்றுள்ளது. ராணுவ வீரரான சவான் பர்வால் பதக்கம் வென்றிருப்பது பெருமை அளிப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
