வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் கைது..!

Estimated read time 1 min read

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வழங்க கூடாது என்று இன்று கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் இந்த பந்த்-தை அறிவித்தார்.

தமிழ்நாட்டிற்குச் சொட்டு நீர் கூடத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் தீவிர போராட்டம் மற்றும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மைசூரு, கொப்பால், அத்திப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட முயன்ற கன்னட சலவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜை பெங்களூருவில் காவல்துறையினர் கைது செய்தனர்.

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள போதிலும், எல்லையோரப் பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், ஓசூர் வழியாகப் பெங்களூருவுக்கு வழக்கம்போல் தமிழ்நாட்டுப் பேருந்துகள் தடையின்றி இயக்கப்பட்டு வருகின்றன.

பெங்களூரில் பிஎம்டிசி பஸ், மெட்ரோ ரயில்கள், வாடகை கார்கள் இயங்கி வருகின்றன. பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், கடைகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வாட்டாள் நாகராஜ் பெங்களூர் மெஜஸ்டிக் பஸ் நிலையம் சென்று கர்நாடகா அரசு போக்குவரத்து கழகம் (கேஎஸ்ஆர்டிசி), பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் (பிஎம்டிசி) நிர்வாகத்திடம் ஆதரவு கோரி பஸ் சேவைகளை நிறுத்தும்படி கூற தயாராகினார். ஆனால் போலீசார் அதற்கு முன்பாக பெங்களூர் டாலர்ஸ் காலனியில் உள்ள வாட்டாள் நாகராஜ் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதற்கு வாட்டாள் நாகராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நான் எங்கும் செல்லவில்லை. வீட்டில் தான் இருக்கிறேன் என்று கூறினார். அதோடு நான் யாரிடமும் பேசப்போவது இல்லை என்று வாயில் ‘டேப்’ ஒட்டியபடி இருந்தார். ஆனால் போலீசார் விடவில்லை.வாட்டாள் நாகராஜை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

You May Also Like

More From Author