செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் களம் இப்போது அரசியல் சூறாவளியால் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேடையில் மைக் பிடித்த எடப்பாடியார், வாக்காளர்களை நோக்கி நேரடியாகவே ஒரு கேள்வியை எழுப்பி தனது பேச்சைத் தொடங்கினார்.
“இந்த இடைத்தேர்தல் ஏன் வந்தது தெரியுமா? மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்தவர், வாக்களித்த மக்களுக்கு உழைப்பதற்குப் பதிலாக, குதிரைப் பேரத்தின் வழியாக பெட்டி வாங்கிக் கொண்டு மாறிவிட்டார். அதிமுக தொண்டர்களும் கூட்டணி கட்சியினரும் ரத்தம் சிந்தி உழைத்து வெற்றி பெற வைத்தால், அந்த உழைப்பை மதிக்காமல் அமைச்சர் பதவி ஆசையில் சென்றுவிட்டார். ஓட்டுப்போட்ட மக்களையும், வெற்றி பெற வைத்த நிர்வாகிகளையும் ஏமாற்றிய இந்தத் துரோகத்திற்கு மக்கள் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.
“இன்றைய அரசியல் ஆட்சி என்பது நிஜம் போல தெரியவில்லை; வெறும் ரீல் மற்றும் ரீல்ஸ் போலத்தான் இருக்கிறது. சினிமாவில் சட்டமன்றக் காட்சி எப்படி நடக்குமோ, அப்படித்தான் நிஜத்திலும் நடக்கிறது. சட்டமன்றம் ஒரு பட்டிமன்றமாக மாறிவிட்டது. நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் சட்டமன்றம் நடந்தால், அதில் 7 மணி நேரம் வெட்டிப்பேச்சுதான் மிஞ்சுகிறது. திமுகவும் தவெகவும் ஒருவரையொருவர் திட்டிக் கொள்வதை நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் வேறு எங்குமே இப்படிப்பட்ட மோசமான ஆட்சியைப் பார்க்க முடியாது.
தவெக அளித்த வாக்குறுதிகள் குறித்துப் பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் 31 ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், தவெக ஆட்சியில் ஒரு பெரிய திட்டமாவது கொண்டு வரப்பட்டதா? ‘சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’ என்பது போல கஜானாவில் பணம் இல்லை. உரிமைத் தொகை ₹2500 உயர்த்தப்படவில்லை, முதியோர் உதவித்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவித்தொகை, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹15,000, நெசவாளர்களுக்கு ₹30,000 என வாக்குறுதி கொடுத்த எதையுமே செய்யவில்லை,” என்று பட்டியலிட்டார்.
மாநிலத்தின் கடன் சுமையை விவரித்த எடப்பாடி பழனிசாமி, “மின்சாரத் துறையில் ₹2,48,000 கோடி கடன், போக்குவரத்துத் துறையில் ₹72,000 கோடி கடன், மொத்தமாகத் தமிழகத்தின் கடன் ₹10 லட்சம் கோடியைத் தொட்டுவிட்டது. பணமிருந்தால்தானே திட்டங்களைச் செய்ய முடியும்? முந்தைய திமுக அரசு கஜானாவை காலி செய்துவிட்டுச் சென்றது என்றால், இந்த அரசும் அதைத்தான் செய்கிறது. இந்த ஒரே ஆண்டில் மட்டும் ₹1.5 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள். கடந்த 4 மாதங்களில் மட்டும் ₹40,000 கோடி கடன். இந்த கடன் சுமையெல்லாம் மக்கள் தலையில்தான் வரியாக விழப்போகிறது. ‘ஆட்சிக்கு வந்தால் வரியைக் குறைப்போம்’ என்று சொன்ன விஜய் எதையும் செய்யவில்லை. பொய் பேசுவதற்காக விஜய்க்கு நோபல் பரிசே கொடுக்கலாம். அவர் மக்களிடையேயும் நடிக்கத் தொடங்கிவிட்டார்,” என்று விமர்சித்தார்.
அரசு நிர்வாகத்தின் சீர்கேட்டிற்கு உதாரணமான ஒரு சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். “சமீபத்தில் மதுரை சட்டக் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், அமைச்சர் பங்கேற்ற மேடையிலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால், அதை மின்வெட்டு என்று சொல்லாமல் ‘மின் பற்றாக்குறை’ என்று சொல்லி அமைச்சர் சமாளிக்கிறார்.”
தனது பேச்சின் நிறைவாக, “70 படங்களுக்கும் மேலாக நடித்தும் கூட ஒரு தேசிய விருதைக் கூட வாங்க முடியாதவர், அரசியல் என்ற பரீட்சையில் எப்படி பாஸ் பண்ணப் போகிறார்?” என்று தவெக தலைவர் விஜய்யை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிப் பிரச்சாரத்தைக் நிறைவு செய்தார்.
